இருதயத்தைத் திடனற்றுப் போகப்பண்ணாதிருங்கள் (Don’t  discourage the heart of anyone).

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத்  திடனற்றுப் போகப்பண்ணுகிறதென்ன? (எண். 32:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/n9NFguWnA3U

இஸ்ரவேல் சபை கானான் தேசத்திற்குள் பிரவேசிக்காதபடிக்கு, வேவு பார்க்கும் படிக்குச் சென்றவர்களில் பத்து பேர், துர்செய்தியைக் கொண்டு வந்து ஜனங்களுக்குள் பரப்பி அவர்கள் இருதயத்தை திடனற்றுப்  போகப்பண்ணினார்கள். எதிரிகளைக் குறித்த பயத்தையும், அவ்விசுவாசத்தையும் அவர்களுக்குள் விதைத்துச் சோர்ந்து போகும் படிக்குச் செய்தார்கள். முப்பத்தெட்டு வருட வனாந்தர அலைச்சல்களுக்குப்  பின்பு மீண்டும் கானானின் எல்லையில்,  யோர்தான் நதியின் இக்கரையில் வந்து சேர்ந்தார்கள். அந்தப் பகுதி செழிப்பாய் காணப்பட்டது. ஆகையால் ரூபன்  புத்திரரும், காத் புத்திரரும் அவர்களுக்கு ஆடுமாடுகள் திரளாய் காணப்பட்டதினால்  மோசேயிடம் வந்து நாங்கள் இப்பகுதியில் குடியிருக்கும் படிக்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அப்பொழுது மோசே பழைய சம்பவத்தை நினைவு படுத்தி, நீங்களும் உங்கள் சகோதரருடைய இருதயத்தை திடனற்று  போகப்பண்ணுகிறது என்ன என்று கேட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் ஒருவரையொருவர்  உற்சாகப்படுத்துகிறவர்களாய் காணப்படுங்கள். ஆவிக்குரிய ஓட்டத்தில் தடைகளைத் தாண்டி ஓடுவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். சபை கூடிவருவதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். நீதிக்குரிய ஜீவியம் செய்வதற்கு உற்சாகப்படுத்துங்கள். உங்கள் செய்கைகளின் மூலம் மற்றவர்களுடைய இருதயத்தை ஒருபோதும்  திடனற்றுப் போகப் பண்ணாதிருங்கள். அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகத்தில்  பர்னபாவைக் குறித்து வாசிக்கமுடிகிறது. மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு அவன் சிறந்த எடுத்துக் காட்டாகக் காணப்படுகிறான். அவன் நிருபங்களை எழுதவில்லை. அவனுடைய பெயரின் அர்த்தமமே  உற்சாகப்படுத்துகிறவன் (Son of encouragement) என்பதாய் காணப்படுகிறது. அவனுடைய இயற்பெயர் யோசே என்பதாகும். அப்போஸ்தலர்கள்  அவனுக்குள் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற கிருபை காணப்பட்டதினால்  அவனுக்கு பர்னபா என்ற பெயரைப் போட்டார்கள். அவன் புதிதாய் இயேசுவை ஏற்றுக் கொண்ட சவுல் என்ற பவுலை உற்சாகப்படுத்தி அவனை அப்போஸ்தலர்களிடத்தில் அழைத்துக் கொண்டு வந்தான். சவுலைக் குறித்து மற்றவர்கள் பயந்து கொண்டு, அவனுடைய இரட்சிப்பைக் குறித்துச்  சந்தேகப்பட்டுக் கொண்டு காணப்பட்ட வேளையில், பர்னபா  தைரியமாகச் சவுலுக்குத் துணைநின்றான். அவன் கர்த்தரைக்  கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அப்போஸ்தலர்களுக்கு  பர்னபா விவரித்துச் சொன்னான் என்று அப். 9:27 கூறுகிறது. ஆதி சபையில் காணப்பட்ட விசுவாசிகளோடு பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினான் என்று அப். 13:14 கூறுகிறது. பின்னாட்களில் பர்னபா,  பவுலால்  புறக்கணிக்கப்பட்ட மாற்குவைக் உற்சாகப்படுத்தி, அவனை தன்னோடு கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புரு தீவுக்குப் போனான் என்று அப்.15:39ல் எழுதப்பட்டிருக்கிறது. பர்னபாவைப் போல நீங்களும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள், யாரையும் திடனற்றுப்  போகப்பண்ணாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae