புதிய ஏற்பாட்டின் மைய வசனம் (The central verse of the New Testament).

அப் 17:17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1RTJv8s2sGQ

புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு புதிய ஏற்பாட்டின் மைய வசனம் என்ன கற்றுக்கொடுக்கிறது? தினந்தோறும் சுவிசேஷத்தை procalaim செய்ய அதாவது அறிவிக்க மற்றவர்களிடம் சம்பாஷணைபண்ண வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்நாட்களில் காணப்படும் அநேக சுவிசேஷகர்களை போல ஆலயத்திற்குள்ளேயே பிரசங்கம் செய்யாமல், சந்தைவெளிகளில் தெருக்களில் கடந்து சென்று சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக ஆலயத்திற்குள்ளாக அல்ல, நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, ஆலயத்திற்குள் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டவர்களாக அல்லாமல், பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம் (எபி 13:12,13). இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்த யோவான் ஸ்நானனும் ஆலயத்திற்குள்ளேயே தன்னை முடக்காமல், யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான் (லுக் 3:6). இயேசு கடலோரங்கள், கல்லறைகள், சந்தைவெளிகளிலேயே அதிகமாக பிரசங்கம் செய்தார். அதுபோல பவுலும் சந்தைவெளிகளில் சுவிசேஷம் செய்ய சம்பாஷணை செய்கிறானாய் காணப்பட்டான். பேசாவிட்டால் சுவிசேஷத்தை நாம் விதைக்க முடியாது. ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனிடம் சோறு எங்கே கிடைக்கிறது என்று சொல்லுவதே நற்செய்தியறிவிப்பு என்றார் ஒரு ஊழியக்காரர். அதுபோல மற்ற அப்போஸ்தலர்களும் வீதிகளிலேயே அதிகமாக அற்புதங்களை செய்தார்கள். பேதுருவும் யோவானும் 40 வயதான ஒருவனை சுகப்படுத்தியது ஆலயத்திற்கு வெளியே. பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள் என்று அப் 5 :15 கூறுகிறது. ஆகையால் சுவிசேஷம் விதைக்கப்படவும், நற்செய்தி அறிவிக்கவும் ஆலயத்திற்குள் முடங்குகிறவர்களாக அல்லாமல் சந்தைவெளிக்கு கடந்து செல்லவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆபிரகாமிடம் ஆண்டவர் நான் காட்டும் தேசத்திற்கு போ என்று சொன்னார். மோசேயிடம் கானானுக்கு போ என்று கூறினார். எரேமியாவிடம் தேசங்களுக்கு, நாடுகளுக்கு போ என்று கூறினார். பேதுரு யோவானிடம் மனிதரை பிடிக்க போங்கள் என்று கூறினார்.பவுலிடம் மக்கெதோனியாவுக்கு போ என்று கூறினார். பேதுருவிடம் கொர்நேலியுவின் வீட்டிற்கு போ என்று கூறினார். பிலிப்புவிடம் காசா வனாந்திரத்திற்கு போ என்று கூறினார். அதுபோல ஆண்டவர் நாம் ஒவ்வொருவரிடம் கூறுவது சந்தைவெளியில் எதிர்பட்டவர்களிடம் போய் பேசுங்கள், அவர்களிடம் சுவிசேஷத்தை விதைக்கவும், நற்செய்தியை கூறவும் கடந்துசெல்லுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இயேசு சமாரியா ஸ்த்ரீயிடம் எவ்வளவு நேர்த்தியாக பேச ஆரம்பித்து அவளுக்கு பிரசங்கம் செய்தார். அதுபோல நம்முடைய வார்த்தைகள், நம்முடைய சம்பாஷணைகள் உப்பால் சாரமேறினவைகளாக, சாந்தத்தோடு பதில் சொல்லுகிறவர்களாகவும் காணப்பட வேண்டும்.

இப்படியாக எதிர்பட்டவர்களுக்கு, சந்தைவெளியில் இருக்கும் அனைவருக்கும் சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்பதே புதிய ஏற்பாட்டின் மைய வசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற பாடமாய் காணப்படுகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org