பழைய ஏற்பாட்டின் மைய வசனம் (A central verse of the Old Testament).

2 நாளா 20:17. இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/X7C3zst-OV8

பழைய ஏற்பாட்டின் மைய வசனத்தின் மைய கருத்து என்ன சொல்லுகிறது? நீங்கள் தரித்துநின்று, இரட்சிப்பைப் பாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். பல காரியங்களை குறித்து சிந்தித்து, கவலைப்பட்டு, பயந்துபோய் இருக்கிறவர்களாய் நாம் காணப்படலாகாது. எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்ற கவலையே அநேகரை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? என்னுடைய அலுவலக எதிர்காலம் எப்படி இருக்க போகிறது? யுத்தத்தின் சத்தம் எங்கும் தொனித்துக்கொண்டிருக்கிற இந்நாட்களில் வருங்காலங்களில் என்னுடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கப்போகிறது? என்ற பல கேள்விகளோடு ஒருவேளை நீங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார் நீங்கள் தரித்துநின்று, உங்கள் மனதை இங்கேயும் அங்கேயும் அலைபாயவிடாமல், அவருடைய இரட்சிப்பை பாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் யோசபாத்திற்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள். ஒரு நபர் இரண்டு நபர்கள் அல்ல, ஏராளமான ஜனங்கள் யோசபாத்திற்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள். இப்படி அநேகர் நமக்கு விரோதமாக படையெடுத்து வரலாம். ஒரு வழியாய் வருகிற அவர்கள் ஏழு வழியாய் ஓடும்படி கர்த்தர் செய்வார். சத்துரு வெள்ளம்போல நமக்கு விரோதமாக எழும்பி வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். நமக்கு ஜெயத்தை கொடுப்பார். எப்படி சமுத்திரத்தின் அலைகள், சுனாமியை போல எழும்பி வருகிறதோ, அதுபோல அநேக நேரங்களில் சத்துரு மனிதர்களை நமக்கு விரோதமாக, ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு விரோதமாக எழும்பும்படி செய்யலாம். இப்படிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தரித்துநின்று கர்த்தர் நமக்கு செய்யும் இரட்சிப்பை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எசேக்கியா இராஜாவுக்கு எதிராக சனகெரிப் எழும்பினான், பெருமையடித்தான். உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்க கூடுமோ என்றெல்லாம் தன்னுடைய மார்பையும் தொடையையும் தட்டிக்கொண்டான். அவனுடைய கர்வம் தலைக்கு மேலாக எழும்பி நின்றது. அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்று எசேக்கியா ஜனங்களை உற்சாகப்படுத்தினான். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான். எசேக்கியா பரலோகத்திற்கு நேராக கர்த்தரை நோக்கி ஜெபித்தான். ஆண்டவர் ஒரு தூதனை அனுப்பி சனகெரிப்பை காலிபண்ணினார்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் யோசபாத்தை போல, எசேக்கியாவை போல தரித்துநிற்க கற்றுக்கொள்ளவேண்டும். அதாவது கடினமான சூழ்நிலையில் கர்த்தருடைய முகத்தையே நோக்கி பார்க்கிறவர்களாக காணப்பட வேண்டும். அப்பொழுது கர்த்தருடைய இரட்சிப்பை நாம் பாப்போம். இதுவே பழைய ஏற்பாட்டின் மைய வசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற பாடம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org