ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது (எண். 21:15).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CZ81eBqRFPs
வேதத்தில் பல புத்தகங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. மோசே ஜெபிக்கும் போது, தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும், இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான் என்பதாக யாத்.32:32 கூறுகிறது. ஜீவ புத்தகத்தைப் பற்றிப் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது என்று மல்.3:16 கூறுகிறது. உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன் என்பதாக வெளி. 5:1 கூறுகிறது. பல புஸ்தகங்கள் திறக்கப்பட்டதைக் குறித்து வெளி. 20:12ல் வாசிக்கிறோம். இப்படிப்பட்ட புஸ்தகங்களில் நம்மைக் குறித்தும், நாம் ஒவ்வொரு நாளும் செய்கிற நற்கிரியைகளையும், துர்கிரியைகளையும் குறித்தும் கர்த்தர் எழுதுகிறவராய் காணப்படுகிறார்.
கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் அவருடைய பிள்ளைகளுக்காக ஆண்டவர் நடத்தின யுத்தங்களையும், அதினிமித்தம் அவருடைய ஜனங்கள் அவரைத் துதித்துப் பாடி நன்றி செலுத்தினதைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கக் கூடும். இஸ்ரவேல் சபையை பார்வோனும் அவன் சேனையும் பின் தொடர்ந்து வந்த வேளையில், நான் உங்களுக்காக யுத்தம் பண்ணுவேன், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்று வாக்குக் கொடுத்து, அவர்களுக்காக யுத்தம் செய்து, எதிரியின் சேனை முழுவதையும் செங்கடலில் அமிழ்த்திப் போட்டார். அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் பாடுவேன், அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார், குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று கர்த்தைாப் புகழ்ந்து துதித்து பாடினார்கள் என்று யாத். 15:1ல் எழுதப்பட்டிருக்கிறது. மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்த வேளையில், அவன் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்து, எதிரிகள் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கும் படிக்குச் செய்தார். யோசபாத்தும் அவன் ஜனங்களும் பெராக்காவிலே கூடி, அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள் என்று 2நாளா. 20:26 கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். உகப்பிரகாரமான யுத்தங்களானாலும், ஆவிக்குரிய யுத்தங்களானாலும் அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். நீங்கள் யாரோடும் சண்டை போடவேண்டிய அவசியமில்லை, பழிவாங்கவும் முயல வேண்டாம். உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சூழ்நிலைகளுக்காகவும், நபர்களுக்காகவும் நீங்கள் கத்தரைத் துதித்துப் பாடி மகிமைப் படுத்துங்கள். அவர் யுத்தத்தில் வல்லவர் என்றும், பராக்கிரமமுள்ளவர் என்றும் வசனம் கூறுகிறது. அவர் உங்களுக்காக யுத்தம் செய்து, உங்களுக்கு ஜெயத்தைத் தருவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae