அடித்தள ஊழியங்கள் (Foundational Ministries).

எபே 2:20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Zf-wHdGiGlE

ஆண்டவர் ஐந்து வகையான ஊழியங்களை சபைக்கு கொடுத்திருக்கிறார். அவற்றில் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் அஸ்திபாரங்கள் அதாவது அடித்தளம் என்று வசனம் கூறுகிறது.

அப்போஸ்தலர் என்ற சொல் கிரேக்க பதத்தில் apo -stolos என்ற வார்த்தையில் இருந்து வந்தது. apo என்றால் தொலைவிலிருந்து என்று அர்த்தம்; stolos என்றால் பயணம் என்று அர்த்தம். இதை இணைத்து அப்போஸ்தலன் என்றால் அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். கர்த்தர் நம்மை அனுப்புகிற இடத்தில் போய், கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் நாம் காணப்பட வேண்டும். கடல் கடந்து நம்முடைய தாய் நாட்டிற்கு வந்து ஊழியம் செய்தவர்கள், சபையை நிறுவியவர்கள் மிஷினரி இல்லையென்றால் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்த ஊழியத்தினால் தான், இன்று நம்முடைய தாய் நாட்டில் அநேக லட்சக்கணக்கான ஜனங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தீர்க்கதரிசிகள் ஆவிக்குரிய காரியங்களை தொலைநோக்கு பார்வையுடன் கருத்தாய் ஆராய்ந்து, சபைக்கு அறிவிக்கிறவர்கள். உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள் (1 பேது 1:10). காலத்தைக்குறித்தும் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்பவர்கள். தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான் (1 கொரி 14:1) என்று வசனம் கூறுகிறது. சபையில் தீர்க்கதரிசனம் சொல்லும்போது எல்லாரும் நிதானிக்க வேண்டும் என்று வசனம் கூறுகிறது. 1 கொரி 14:29 தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். நாமெல்லாரும் தீர்க்கதரிசன வரத்தை நாடுகிறவர்களாய் காணப்பட வேண்டும்

ஆண்டவர் பழைய ஏற்பாடு காலத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாக தன்னுடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலமாக தன்னுடைய வார்த்தையை வெளிப்படுத்தி இருக்கிறார். பவுல் இதைக்குறித்து எபேசு சபைக்கு எழுதும்போது கூறுகிறான், கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை (எபே 3:5,6). நாமெல்லாரும் இந்த அப்போஸ்தல தீர்க்கதரிசன அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்ட மாளிகைகளாக இருக்கிறோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org