எபே 4:13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KcB4EPx2wbY
ஆண்டவர் ஐந்து வகையான ஊழியங்களை சபைக்கு கொடுத்திருக்கிறார். அவற்றில் பேய்ப்பனின் ஊழியமும், போதகரின் ஊழியமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. அதாவது மேய்கிறவர்கள் போதிக்கிறவர்களாகவும், போதிக்கிறவர்கள் பேய்ப்பராகவும் இருக்க வேண்டும். ஆகையால் தான் சிலரை என்ற வார்த்தை மேற்குறிப்பிட்ட வசனத்தில் நான்கு முறையும், கடைசியாக சிலரை மேய்ப்பரும் போதகருமாய் ஏற்படுத்தினார் என்று சேர்த்தும் எழுதப்பட்டிருக்கிறது.
இயேசு சொன்னார் நானே நல்ல மேய்ப்பன் என்பதாக. நாம் அவருடைய மந்தைகள். கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்று சங்கீதக்காரன் கூறுகிறான். மேய்ப்பர்களுடைய பணி ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம் செய்யும் பணி. மேய்ப்பரின் பணி ஒரு ஆத்துமாவை கடைசி மட்டும் நடத்துகிற உன்னதமான பணி. இயேசு பிறக்கும்போது, மரியாளுக்கும் யோசேப்புக்கும் தனி தனி தூதர்கள் தான் வந்து இயேசுவின் பிறப்பை குறித்து கூறினார்கள். ஞானிகளுக்கு ஒரே நட்சத்திரம் தான் வழிகாட்டியது. ஆனால் மேய்ப்பர்களுக்கு பரம சேனையின் திரள் வந்து, இயேசுவின் பிறப்பை குறித்து அறிவித்தார்கள் (லுக் 2:13). இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார் (மத் 9:36-38). தொய்ந்துபோன ஆடுகள், மேய்ப்பனில்லாத ஆடுகள் இந்த உலகத்தில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களெல்லாருக்கும் நல்ல மேய்ப்பன் கிடைக்க நாம் வேண்டிக்கொள்ளுகிறவர்களாக காணப்பட வேண்டும். மந்தைகளை மேய்க்கும் உன்னதமான பணியை கர்த்தர் மேய்ப்பர்களுக்கு கொடுத்திருக்கிறார். பேதுருவிடம் ஆண்டவர் கூறும்போது என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று கூறுவார். என் ஆடுகள் என்று நம்மை உரிமையோடு அழைத்த ஆண்டவர், நம்மை மேய்க்கும் பெரிய பொறுப்பை மேய்ப்பர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
கிறிஸ்து நமக்கு போதகர், நாமெல்லாரும் அவருடைய மாணவர்கள். நாம் பாடங்களை, கல்வியை கற்றுக்கொள்ள பள்ளிக்கூடத்திற்கு கடந்து செல்கிறோம். அங்கே ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அதுபோல தான், சபை என்பது ஒரு பள்ளிக்கூடம், சபை என்பது நமக்கு கல்லூரி. நாமெல்லாரும் சபையில் படிக்கும் மாணவர்கள். அங்கே தான் நாம் ஆரோக்கிய உபதேசங்களை கற்றுக்கொள்ள முடியும். சீஷன் என்பதற்கு கிரேக்க பதத்தில் மாணவன் என்ற அர்த்தமும் உண்டு. சபைக்கு கடந்து செல்லும்போது போதகர் மூலம் கர்த்தர் கற்றுக்கொடுக்கும் உபதேசங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு இருக்கும் சிந்தையோடு விசுவாசிகளாகிய நாம் கடந்து செல்ல வேண்டும்.
நம்முடைய தேவன் ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிறவர். ஆகையால் ஆத்துமாக்களுக்கு உத்திரவாதம் செய்யும் மேய்ப்பர்களுக்கும், ஆரோக்கிய உபதேசத்தை கற்றுக்கொடுக்கும் போதகர்களும் ஜெபிக்க வேண்டிய கடமை சபைக்கு காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org