ரோம 8:17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9IOZhf9prjI
இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளைகள். சபையில் இரட்சிக்கப்பட்ட அத்தனைபேரும் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். இவர்களில் முக்கியமான பிள்ளைகள், பெரிய பிள்ளைகள், செல்லப்பிள்ளைகள் என்ற வேறுபாடு இல்லை. சபையில் இருக்கும் அனைவரும் ஒருநிலையில் அதாவது சமஉரிமைகளோடு இருக்கும் பிள்ளைகள். சபையில் அநேக வருட விசுவாசிகள் இருக்கலாம், புதிய விசுவாசிகள் இருக்கலாம், சபையில் சிலர் பாடல் பாடுகிற குழு, இசைக்கருவியை வாசிக்கிற குழு போன்ற ஊழியம் செய்யலாம், சிலர் நாற்காலியை எடுத்துவைக்கும் ஊழியம் செய்யலாம், சிலர் சபையை தூய்மைப்படுத்துகிற ஊழியம் செய்யலாம், சிலர் பொருளாதாரத்தால் சபையின் ஊழியத்தை தாங்கலாம், சிலர் ஜெபத்தால் சபையை தாங்கலாம், சபையில் எந்தவொரு ஊழியம் செய்கிறவர்களாக இருந்தாலும், எல்லாரும் தேவனுடைய பிள்ளைகள் என்ற சமநிலையில் இருப்பவர்கள் என்பதை தேவ பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும். சபையில் எந்தவொரு தேவ பிள்ளைக்கும் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், முக்கியமானவர்கள், முக்கியமில்லாதவர்கள் என்ற பாகுபாடு இருக்க கூடாது.
சபையிலிருக்கும் தேவ பிள்ளைகள் எல்லாரும், சபைக்கு, ஆண்டவர் கொடுக்கும் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியும். ஆலயத்தின் நன்மையினால் கர்த்தர் ஒவ்வொருவரையும் திருப்தியாய் ஆசீர்வதித்து நடத்துவார். ஆனால் இன்று அநேக சபையில் இருக்கும் விசுவாசிகள், மற்ற விசுவாசிகளிடம் கோபம் கொண்டு, முறுமுறுத்து, ஐக்கியமில்லாமல் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்டவர்களால் தேவனுடைய இருதயம் துக்கப்படுகிறது என்பதை எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு தகப்பனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்குமென்றால், இரண்டு பிள்ளைகளும் தகப்பனுக்கு முக்கியம்; அதுபோலத்தான், சபையிலிருக்கும் அத்தனை பிள்ளைகளும் தேவனுக்கு முக்கியமானவர்கள். இப்படியிருக்க, சகவிசுவாசிகளிடம் கோபப்படுகிறவர்களாக ஒருவரும் காணப்படக்கூடாது.
நமது ஊர்களில் தொட்டால் சுருங்கி என்ற செடி காணப்படும். இந்த செடியின் சுபாவம், யாரவது இந்த செடியின் இலையை தொட்டாலே, முழுச்செடியும் சீக்கிரம் சுருங்கிவிடும். அதுபோலத்தான், இன்று அநேக விசுவாசிகள் மற்றும் முன்னணியிலிருந்து ஊழியம் செய்கிறவர்கள் கூட தொட்டால் சுருங்கி செடியின் சுபாவம் உடையவர்களாக காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட விசுவாசிகள் பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்தை எப்படி பெற்றுக்கொள்ள முடியும். இளைய குமாரனுக்கு இருக்கும் சுபாவத்தோடு சபைக்கு வருகிறவர்கள் மாத்திரமே, அப்பாவீட்டில் இருக்கும் ஆசீர்வாதத்தை சுதந்திரக்க முடியும். இளையகுமாரன் திரும்ப தகப்பனிடம் வந்தபோது, தகப்பன் கட்டி அணைத்து முத்தமிட்டார், உயர்ந்த வஸ்திரத்தை உடுத்தினார், முத்திரை மோதிரத்தை தரிப்பித்தார், பாதரட்சையை கொடுத்தார், கொழுத்த கன்றை அடித்தார், நடனக்களிப்பு அங்கே இருந்தது, பிள்ளைக்குரிய அந்தஸ்தை ஆசீர்வாதத்தை தகப்பன் இளைய பிள்ளைக்கு கொடுத்தார். தகப்பனை பொறுத்தவரையில் மூத்தகுமாரனும் முக்கியம், இளைய குமாரனும் முக்கியம். ஆகையால் சபையிலிருக்கும் எல்லா பிள்ளைகளும் தேவனுக்கு முக்கியம். ஆகையால், ஒரு முறுமுறுப்பும் இல்லாமல், தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள். சபையிலிருக்கும் ஒவ்வொரு தேவபிள்ளைகளும், தேவனுடைய சுதந்தரர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org