உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார் (உபா. 18:18).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dJS2vXDt5C8
மோசே, கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசியாய் காணப்பட்டான். அவனைப் போலக் கர்த்தரை முகமுகமாய் அறிந்த ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்பதாக உபா. 34:12 கூறுகிறது. அவன் கர்த்தருடைய வாயாய் காணப்பட்டான். தோரா என்று அழைக்கப்படும் முதல் ஐந்து ஆகம புஸ்தகங்களை கர்த்தரிடத்திலிருந்து பெற்று நமக்கு அளித்ததைப் பார்க்கும் போது அவன் தேவனோடு கொண்ட நெருக்கமான உறவை புரிந்து கொள்ள முடியும். அவன் மரிப்பதற்கு முன்பு, இஸ்ரவேல் சபையைப் பார்த்து என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நம்முடைய சகோதரரிலிருந்து தேவன் உங்களுக்காக எழும்பப்பண்ணுவார் என்றான். அது மேசியாவாகிய இயேசுவைக் குறித்துக் கூறப்பட்ட தீர்க்கதரிசனமாகும். இயேசு, யூதர்களைப் பார்த்து நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள் அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே என்று யோவான் 5:46ல் இதைப்பற்றிக் கூறினார். பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றுகிறார் என்று எபி. 1:1,2ல் ஆக்கியோன் எழுதியிருக்கிறான். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன் என்று தேவன் கூறினதை உபா. 18:19ல் வாசிக்கிறோம்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கடைசி நாட்களில் அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி கர்த்தருடைய வார்த்தையைப் புரட்டுகிறார்கள். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நாம் எப்படிப் புரிந்துகொள்ளுவது? ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான் என்று உபா. 18:22 கூறுகிறது. அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு, பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் என்று 2 பேதுரு 1:19ல், அப்போஸ்தலன் இயேசுவின் வசனம்தான் நம்முடைய தீர்க்கதரிசனம் என்று கூறுகிறான். ஆனால் அதைக் கவனித்து, அதற்குச் செவிகொடுத்து கீழ்ப்படிவதற்குப் பதிலாக, பலவிதமான போதனைகளுக்காக, தீர்க்கதரிசனங்களுக்காக அலைந்து திரிகிற கிறிஸ்தவர்களை அதிகமாய் இந்நாட்களில் பார்க்கமுடிகிறது. மக்களுடைய மனநிலையைப் புரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களைத் தீர்க்கதரிசிகள் என்ற அடைமொழியோடு அழைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, இந்நாட்களில் உங்கள் இருதயம் பலவிதமான போதனைகளினால் அல்ல, கிருபையினால் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். வார்த்தை பிசகாத, பொய்யுரையாத, அந்த ஒரு தீர்க்கதரிசியாகிய இயேசுவையும், அவருடைய வார்த்தையும் கவனித்து வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae