உடைகள் (Dresses).

புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்(உபா. 22:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jL9rmyZgPA4

ஏழு காரியங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள், அவையாவன: மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,  துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் என்பதாக நீதிமொழிகள் ஆறாவது அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  மேற்குறிப்பிட்ட வசனத்தில்  புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அவ்வாறு செய்கிறவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் என்றும் கர்த்தர் அவர்களை வெறுக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் நாட்களில் யூதர்களில் ஆண்கள் பெண்கள் இருபாலரும் நீண்ட அங்கிகளைத் தரிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள், சில சின்ன  வித்தியாசங்கள் அவர்கள் ஆடைகளில் காணப்பட்டது. அவ்வாறு காணப்படுகிற சிறு வித்தியாசமான ஆடைகளைக் கூட அவர்கள் மாற்றி அணியக்கூடாது என்பது கர்த்தருடைய கட்டளையாய் காணப்பட்டது. இப்போது புதிய உடன்படிக்கையின் காலம், இந்த கிருபையின் காலத்தில், ஆண்டவர் இருதயத்தைப் பார்க்கிறார், ஆகையால் வெளிப்புறமான ஆடைகளை யார் எதுவேண்டுமென்றாலும் அணியலாம் என்று கூறுகிறவர்கள் உண்டு. ஆனால் 1 தீமோத்தேயு 2:9,10ல் ஸ்திரீகள் தகுதியான வஸ்திரத்தினால் தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுவதற்கேற்ற ஆடைகளை அணியவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இது ஸ்திரீகளுக்கு மட்டுமல்ல புருஷர்களுக்கும் பொருந்துகிறதாய் காணப்படுகிறது. 

ஆடைகள் அணியும் போது, நம்முடைய நோக்கங்கள் என்ன என்பது முக்கியம். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் படிக்கு ஆடைகளை அணிகிறோமா? மற்றவர்களை விட நான் உயர்ந்தவன் என்பதைக் காட்ட அணிகிறோமா? மற்றவர்களுக்கு இடறலாய் காணப்பட அணிகிறோமா? என்பதையெல்லாம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்நாட்களில் கிறிஸ்தவ குடும்பங்களில் காணப்படுகிற பெற்றோர்கள், நாகரீகம் என்ற போர்வையில் பிள்ளைகள் எப்படிப்பட்ட ஆடைகளை அணிந்தாலும் கண்டுகொள்ளாமல் காணப்படுகிறதைப் பார்க்கமுடிகிறது. என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன், அவைகளை அவர்கள் அந்நிய காரியமாக எண்ணினார்கள் என்ற ஆண்டவருடைய அங்கலாய்ப்பின் தொனி நம்முடைய செவிகளில் விழுந்தால் நலமாயிருக்கும். கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற நமக்கொத்த வேறு பாக்கியமான ஜனங்கள் இந்த பூமியில் வேறொருவரும் இல்லை. ஆகையால் ஆண்டவருடைய வசனங்களை மீறி நடந்து, அவரால் அருவருக்கப்படத்தக்க நபர்களாய் ஒருநாளும் மாறிவிடாதிருங்கள். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம் அவருடைய கற்பனைகள்  பாரமானவைகளுமல்ல என்று 1யோவான் 5:3 கூறுகிறது. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்று மத்தேயு 11:30ல் ஆண்டவர் கூறினார். ஆகையால் ஆண்டவருடைய ஆலோசனைகளைக் கடினமானதென்றும் பாரமானதென்றும் நினைத்து ஒதுக்கிவிடாதிருங்கள், மாறாக அவைகளுக்கு  கீழ்ப்படியும் போது, அவருடைய நன்மைகளும் ஆசீர்வாதங்களும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொடரும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae