உங்கள் வயது என்ன? (What is your age?).

யோசு 14:10,11 இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/01XWQU1Q9jk

ஒரு விசுவாசியின் வயதை மூன்று விதங்களில் சொல்லலாம். முதலாவதாக, ஒரு நபருடைய பிறப்புச்சான்றிதழின் படி அவர்கள் வயதை அறிந்துகொள்ளலாம். இரண்டாவதாக, ஒரு நபரின் தோற்றத்தை பார்த்து, மற்றவர்கள் அந்த மனிதனின் வயது இவ்வளவு என்று கணிப்பார்கள். ஒரு அதிகாரி புதிதாக வேலைக்கு சேர்ந்த நபரிடம், அவரின் அனுபவம், அவருடைய சொந்த ஊர் போன்றவற்றை கேட்டு அறிந்துகொண்டிருந்தார். அப்படி பேசும்போது அவருடைய உருவத்தையும், எடையையும் பார்த்து உங்களுக்கு நாற்பது வயது இருக்குமா என்று கேட்டார்? இதை கேட்ட நபர் திடுக்கிட்டு, எனக்கு வயது முப்பது தான் ஆகிறது என்று கூறினாராம். இப்படித்தான் நம்முடைய வயதை, வெளித்தோற்றத்தை பார்த்து அநேகர் கணிக்கிறார்கள். மூன்றாவதாக, ஒரு விசுவாசியின் வயதை, அவர் இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சியை பார்த்து சொல்லலாம்.

காலேப் யோசுவாவிடம் தனக்கு மலைநாட்டை தாரும் என்று கேட்டான். சமவெளியில் இருக்கும் ஒருபட்டணம் வேண்டும் என்று கேட்கவில்லை. சமவெளியில் இருக்கும் பட்டணத்தை சுதந்தரிப்பதை காட்டிலும், மலைநாட்டை சுதந்தரிப்பது மிகவும் கடினம். லோத்திடம் ஆண்டவர் உன் ஜீவன் தப்ப நான் காட்டும் மலைக்கு போ என்று சொல்லுவார். ஆனால் லோத்து அது கடினம் என்று சொல்லி அருகிலிருக்கும் ஒரு இடத்துக்கு போகும்படி அனுமதிக்க வேண்டும் என்று கூறினான். ஆனால், காலேப் முற்றிலும் மாறாக, அவன் கடினமான தேசத்தை சுதந்தரிக்க கேட்டுக்கொண்டான். நாமும் ஆண்டவரை சேவிக்கவோ, சுவிசேஷம் அறிவிக்கப்படாத எந்தவொரு இடத்திற்கும் கடந்துசெல்லவோ கடினம் என்று முடங்கிவிட கூடாது. அவர் அனுப்புகிற இடத்திற்கு கடந்துசெல்ல, எப்பொழுதும் ஆயத்தமாக காணப்படவேண்டும்.

காலேப் இந்த மலைநாட்டை சுதந்திருக்கும்போது அவனுடைய வயது 85. ஆனால், அவனுக்கிருந்த பெலன் அவன் 40 வயதிலிருந்ததை போல காணப்பட்டது. இது காலேபிற்குள் இருந்த ஆவிக்குரிய பெலன். மாம்சபெலனானது வயது செல்ல செல்ல, குறைந்துகொண்டே போகும். ஆனால் ஆவிக்குரியபெலனானது, வயது செல்ல செல்ல, கூடிக்கொண்டே போகும். ஏனென்றால், ஆவிக்குரிய பெலன் பரிசுத்த ஆவிக்குள் இருக்கிறது. நம்முடைய மாம்சம் பெலவீனமுள்ளது; ஆவியோ உற்சாகமுள்ளது. காலேபை போல ஆவிக்குரிய வயதில் நாம் முன்னேறுகிறவர்களாக, திடப்படுகிறவர்களாக காணப்பட வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் ஆண்டவரோடு இருக்கிற தொடர்பு, வேத வாசிப்பு, ஜெபம் சரியாய் இல்லையென்றால், ஆவிக்குரிய வயதில் பெலவீனம் காணப்படும். ஆண்டவரோடுள்ள ஐக்கியம் நன்றாக இருந்தால், ஆவிக்குரிய வயதில் காலேபுக்கு இருந்த பெலனை போல காணப்படும். நீங்களும் காலேபை போல வயது முதிர்ந்தாலும் சத்துருவோடு யுத்தம் செய்கிற போர்சேவகனாக போக்கும் வரத்துமாய் இருக்க, ஆவிக்குரிய பெலனை நாடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org