மறைவானவைகளும், வெளிப்படுத்தப்பட்டவைகளும் (The secret and revealed things).

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே  உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த  நியாயப்பிரமாணத்தின்  வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்(உபா. 29:29).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3PI5WIvpqxo

தேவன் சிலகாரியங்களை நமக்கு மறைவாகவும், சில காரியங்களை   வெளிப்படுத்தியும் வைத்திருக்கிறார். அந்நிக்கிறிஸ்துவின் ஆட்சியின் நாட்கள் எப்படிப்பட்டவையாய் காணப்படும் என்பதைப் பற்றிய சில தரிசனங்கள் தானியேலுக்கு வெளிப்படுத்தப் பட்டது.   அவைகளின் அர்த்தத்தை அவன் அறிய விரும்பினான், ஆனால் அவனுக்கு அவைகள்  புதை பொருட்களாய் மறைவானதாகக் காணப்பட்டது. நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை, ஆகையால்: என் ஆண்டவனே,  இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன், அதற்கு அவன்: தானியேலே, போகலாம், இந்த வார்த்தைகள்  முடிவுகாலம்மட்டும்  புதைபொருளாக வைக்கப்பட்டும்  முத்திரிக்கப்பட்டும் இருக்கும் என்று தானியேல் 12:8,9ல்  எழுதப்பட்டுள்ளது. தானியேலுக்கு பின்பு சுமார் அறுநூறு வருடங்கள் கழித்து வாழ்ந்த யோவான் பத்மூ தீவில்  சிறைவைக்கப்பட்டவனாய் காணப்பட்ட வேளையில் கடைசி நாட்களில் சம்பவிக்கப் போகிற காரியங்களைக் கர்த்தர் அவனுக்கு வெளிப்படுத்தினார். அந்நிக்கிறிஸ்துவின் ஏழு வருட ஆட்சி எப்படிப்பட்டதாய் காணப்படும், போலி திரித்துவமாகிய சாத்தான்,  அந்திக்கிறிஸ்து,  கள்ளத்தீர்க்கதரிசி அவர்களுடைய முடிவு, மற்றும் கர்த்தருடைய பிள்ளைகளுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற புதிய எருசலேம்  அவைகளைப் பற்றி எல்லாம் கர்த்தர் தரிசனத்தில்  அவனுக்குக் காண்பித்தார்.  பின்பு, அவைகளை மறைத்து வைக்க வேண்டாம் என்று ஆண்டவர் கட்டளையிட்டார். பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப்  புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை  முத்திரை போடவேண்டாம், காலம் சமீபமாயிருக்கிறது என்று வெளி. 22:10ல் எழுதப்பட்டிருக்கிறது. சில காரியங்களைக்  குறிப்பிட்ட காலத்திற்கு மறைத்து வைக்கிற தேவன், பின்பு அவைகளை வெளிப்படுத்துவார். காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை, காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை என்று நீதி. 25:2 கூறுகிறது. தேவனுடைய மறைபொருட்களை ராஜாக்களாய் அழைக்கப்பட்ட நீங்கள் ஆராய்ந்து பார்க்கிறவர்களாய் காணப்படுங்கள்.

தேவன்  என்னென்ன  காரியங்களை  வெளிப்படுத்திக்  கொடுத்திருக்கிறாரோ, அவைகள் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியவைகளாகவும்,  போதுமானவைகளாகவும் காணப்படுகிறது. ஆண்டவர், எல்லாக் காலங்களிலும் காணப்படுகிறவர்களுக்கு    தம்முடைய செய்தியை வேதத்தில் வைத்திருக்கிறார்.  பெரியவர்களுக்குக் கர்த்தருடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.    பிள்ளைகளுக்குக் கர்த்தருடைய செய்தி காணப்படுகிறது. இனித் தோன்றப் போகிற சந்ததிகளுக்கும் கர்த்தருடைய செய்தி காணப்படுகிறது. அவைகள் நித்திய நாட்களாய் எல்லாருக்கும் என்றென்றைக்கும்  போதுமானதாக  காணப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தை ஒருநாளும் காலாவதியாவதில்லை. நாமெல்லாரும்  அந்த  நியாயப்பிரமாண  வார்த்தையின் படி செய்ய நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்படிச் செய்யும் போது நாமும் நம்முடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் ஆசீர்வாதமாய் காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae