பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rSeiWEPV4Hc
தாழ்மையின் ஆழம், தாழ்மையின் உயரம், தாழ்மையின் அகலம் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட வசனத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இயேசு பிதாவுக்கு சமமாயிருப்பவர். அதாவது, அண்ட சராசரங்கள் மேலும் ஆளுகையை கொண்டவர், புகழின் உச்சத்திற்கு சொந்தமானவர், எல்லா கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரர், தான் ஒருவரே ஞானமுள்ளவர், எல்லா அதிகாரத்திற்கும் மேலான அதிகாரத்தை கொண்டவர், அவற்றையெல்லாம் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ சாயலானதே தாழ்மையின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம், ஆனால், அதைக்காட்டிலும் சிலுவையின் மரணப்பரியந்தம் தம்மை கீழ்ப்படுத்தி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, ரோம போர்சேவகர்கள் எல்லாரையும், அதிபதிகள் எல்லாரையும், சாத்தானின் சகல இராஜ்யங்களையும் ஒரு நிமிசத்தில் நிர்மூலமாக்கி, அவர் மீண்டும் பிதாவினிடத்திற்கு கடந்து சென்றிருக்க முடியும். அதற்கான முழு சுதந்திரமும், அதிகாரமும் இயேசுவுக்கு உண்டு. இருந்தாலும் இயேசு தம்மை சிலுவையில் மரணப்பரியந்தம் தாழ்த்தினார். இது தான் தாழ்மையின் உச்சகட்டத்திலும் உச்சக்கட்டம்.
ஏன் இயேசு சிலுவையில் தம்மை தாழ்த்தினார்? காரணம்,அவருக்குள் இருந்த தாழ்மை என்னும் சுபாவமே, நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து, வியாதியின் பிடியிலிருந்து, சாபத்தின் கட்டுகளிலிருந்து நம்மை மீட்டெடுத்தது, நமக்கு விடுதலை கொடுத்தது. சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது, ஏழு வார்த்தைகளை சொன்னார், அதுபோல, தாழ்மையின் முக்கியத்துவத்தை நம் எல்லாருக்கும் தன்னுடைய செயல்பாட்டினால் கற்றுக்கொடுத்தார். இவ்வளவு முக்கியமான தாழ்மையை குறித்து நாம் தெளிவு இல்லாமல் இருப்போம் என்றால், நம்முடைய விசுவாச பயணத்திலும், வாழ்க்கையின் ஓட்டத்திலும் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம். இயேசு சொன்னார், நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11:29) என்பதாக. தாழ்மை நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை கொடுக்கும். ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்று மத் 18:4ல் இயேசு சொன்னார். தாழ்மை நம்மை உயர்த்தும், அந்த உயர்வு பரலோக இராஜ்யம் வரைக்கும் இருக்கும். மரியாள் சொன்னாள், அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள் (லுக் 1:48) என்பதாக. நம்முடைய தாழ்மையை இயேசு நோக்கி பார்த்து, எல்லா சந்ததிகளிலும் பாக்கியவான்களாக இருக்கும்படி செய்வார். சிலுவையில் இயேசு கற்றுக்கொடுத்த மிக முக்கியமான தாழ்மை என்னும் சுபாவத்தோடு, மற்றவர்களை கனம் பண்ணுவதில் முந்திக்கொண்டு, சுயம் சாக ஒப்புக்கொடுத்து ஜீவியுங்கள். அப்போழுது தாழ்மையுள்ளவனை உயர்த்துகிறவர், உங்களையும் நோக்கி பார்த்து பரலோக இராஜ்யத்திலும் உயர்ந்திருக்கும்படி செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org