எபி 11:36-37 வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xJjYaM7g5FY
எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் விசுவாச வீரர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. விசுவாசத்தினாலே சுதந்தரித்தவர்கள், பிள்ளையை பெற்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சிவந்த சமுத்திரத்தை கடந்தவர்கள், ராஜ்யங்களை ஜெயித்தவர்கள், சிங்கங்களின் வாய்களை கட்டியவர்கள், யுத்தத்தில் வல்லவர்கள், உயிரோடெழுந்திருக்கப்பெற்றவர்கள் என்று விசுவாசத்தின் வளர்ச்சியானது படிப்படியாக வளர்த்ததை பார்க்கலாம். அந்த விசுவாசத்தின் உச்சக்கட்டம் எபி 11:36 லிருந்து எபி 12:1 வரை எழுதப்பட்டிருக்கிறது. விசுவாசத்தை குறித்து அதிகமாய் அறிந்துகொள்ளுகிறவர்கள், விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், விசுவாசத்தின் உச்சத்தை அடையும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை அடைய தைரியங்கொள்ளுகிறவர்களாக காணப்பட வேண்டும்.
ஸ்தேவான் ஒரு விசுவாச வீரன் என்று வசனம் கூறுகிறது. ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான் என்று அப் 6:8 கூறுகிறது. அப்படிப்பட்ட விசுவாசத்தினால், அவன் கல்லெறிந்து கொல்லப்படக்கூடிய சூழ்நிலை வந்தது. அப்பொழுது கூட அவன் ஆண்டவர் மீது வைத்த விசுவாசத்தை அவன் விடவில்லை. இயேசுவுக்காக முதல் இரத்தசாட்சியாக அவன் மரித்தான்.
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவை அக்கினிசூளையில் போடும்போது அவர்கள் சொன்ன வார்த்தை, நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள் (தானி 3:17,18). அதேபோல, தானியேலும் சிங்ககெபிக்குள் போடப்படும்போதும், கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தை அவன் விடவில்லை. இவர்களெல்லாம் விசுவாசத்தின் உச்சகட்டத்தை செயல்படுத்திக்காட்டியவர்கள்.
கொரிய தேசத்தில் ஒரு ஊழியக்காரரையும், அவர் மனைவியையும் கிறிஸ்தவத்திற்கு விரோதிகள், கைது செய்து இயேசுவை மறுதலிக்கும்படி கூறினார்கள். அவர்களோ தங்கள் ஜீவன் போனாலும் இயேசுவை மறுதலிக்கமாட்டோம் என்று தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்கள். இவர்களின் விசுவாசத்தை உடைக்க நினைத்த சதிகாரர்கள், அந்த ஊழியக்காரரின் மூன்று பிள்ளைகளையும் பிடித்து அவர்கள் கண்களுக்கு முன்பாக தரையை தோண்டி உள்ளே போட்டார்கள். அப்பொழுது சொன்னார்கள், இப்பொழுது இயேசுவை மறுதளியுங்கள். இல்லையென்றால், உங்கள் மூன்று பிள்ளைகளையும் உயிரோடே மண்ணில் புதைத்துவிடுவோம் என்று. ஊழியக்காரரின் கண்கள் தன் இளம்பிள்ளைகளின் சூழ்நிலையை பார்த்து, அவர்களின் இருதயம் துடித்தது. அவர்கள் வாயை திறந்து இயேசுவை மறுதலிக்கிறேன் என்று சொல்ல துவங்குவதற்கு முன்பாக, இளம் பிள்ளைகள் சத்தமிட்டு சொன்னார்கள், அப்பா, இயேசுவை மறுதலிக்க வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் நாமெல்லாரும், பரலோகத்தில் இயேசுவை சந்திக்க போகிறோம். நாம் அங்கே மகிழ்ச்சியோடு சந்திப்போம் என்று சொன்னார்கள். இதை கேட்டவுடன், ஊழியக்காரர் சத்தமிட்டு, என் இரட்சகராகிய இயேசுவை மறுதலிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே ஆத்திரமடைந்த சதிகாரர்கள், மூன்று பிள்ளைகளையும் உயிரோடே புதைத்து, ஊழியக்காரரையும், மனைவியையும் சிரச்சேதம் செய்தார்கள். இவர்கள் விசுவாசத்தின் உச்சகட்டத்தை செயல்படுத்திக்காட்டியவர்கள். இப்படிப்பட்ட விசுவாசமே, விசுவாசத்திலெல்லாம் மேலான விசுவாசம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org