மன்னிப்பின் உச்சக்கட்டம் (Height of Forgiveness)

லுக் 23:34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/E8zJiZClrtA

சிலுவையில் இயேசு பேசிய முதல் வார்த்தையே மன்னிப்பின் உச்சக்கட்டம். தண்டனைக்கு உரியவர்களை நீதிபதி விசாரணை செய்வார். ஆனால் நீதிபதியே தண்டனைக்கு பாத்திரவானாக சிலுவையில் தொங்கினார். யாருடைய தண்டனைக்கு என்று கேட்டால், நம்முடைய ஒவ்வொருவருடைய தண்டைனையையும் அவர் ஏற்றுக்கொண்டு சிலுவையில் தொங்கினார். நீதிபரராகிய இயேசு தண்டனைக்குரியவர்களாகிய நம்மீது பாசங்கொண்டு, அன்புகூர்ந்து, நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னித்துவிட்டார். நம் ஆண்டவருடைய மன்னிப்பு நிகரற்றது, ஒப்பற்றது, யாரும் கொடுக்கக்கூடாத மன்னிப்பை இயேசு ஒருவரே கொடுக்க முடியும்.

ரோம போர்சேவகர்கள் இயேசுவை சிலுவையிலறைந்தாலும், இயேசுவை காட்டிக்கொடுத்ததும், அவரை சிலுவையில் அடிக்க ஒப்புக்கொடுத்ததும், தம் சொந்த ஜனமாகிய யூதர்களும், அவருடைய சீஷர்களுமே. நம்முடைய பாவங்களே, இயேசுவை சிலுவைக்கு நேராக கொண்டுபோனது. ஆகையால், இயேசுவின் மன்னிப்பின் இருதயத்தை நினைக்கும்போது எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சனும் உருகியேதான் ஆகவேண்டும். கெட்டகுமாரன் தன் தகப்பனிடம் வந்து பாவ அறிக்கை செய்துமுடிக்கும் முன்னரே, தகப்பன் அவன் பாவங்களெல்லாவற்றையும் மன்னித்துவிட்டார். ஒரு திமிர்வாதக்காரனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அந்த திமிர்வாதக்காரனுக்கு சுகத்தை கொடுக்கும் முன்னமே, மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் (மத் 9:2). காரணம், பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு. இப்படியாக, இயேசு விபச்சாரத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்ட ஸ்திரீயை மன்னித்தார். இயேசுவை சபித்த, பேதுருவையும் மற்ற சீஷர்களையும் மன்னித்தார். உங்கள் பாவத்தையும் மன்னிப்பார்.

இயேசு சொன்னார், இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மத் 26:28) என்பதாக. இந்த வசனத்தின்படி, இயேசுவின் இரத்தம், சிலருக்காக சிந்தப்படவில்லை; மாறாக, அவருடைய இரத்தம் அநேகருக்காக சிந்தப்பட்டது. எதற்காக சிந்தப்பட்டது என்றால், நாமெல்லாருக்கும் பாவமன்னிப்பு உண்டாகும்படி சிந்தப்பட்டது. இயேசுவின் இரத்தம் விலையேறப்பெற்றது. இந்த உலகத்தில் பிறந்த ஆதாம் முதல், இந்நாள் வரைக்கும் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருந்த அணைத்து மனிதர்களும் சம்பாதித்த செல்வம், இனிப்பிறக்கப்போகிற மனிதர்கள் சம்பாதிக்க போகிற செல்வம், இவையனைத்தையும் கூட்டினால் வருகிற செல்வமானது, இயேசு கிறிஸ்துவின் ஒரு சொட்டு இரத்தத்திற்கு ஈடாகாது. அப்படி இருக்கையில், இயேசு தன் சரீரத்திலுள்ள முழு இரத்தத்தையும் சிந்தி, நாமெல்லாரையும் விலைகொடுத்து வாங்கினார். அது தான் இயேசு செயல்படுத்தி காட்டிய மன்னிப்பின் உச்சக்கட்டம். இவ்வுலகத்தில் பாவத்தை மன்னிக்கிற அதிகாரத்தை கொண்டவர் இயேசு ஒருவர் மாத்திரமே. இந்த உலகத்தில் நாம் எங்கு சென்றாலும், பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றாலும், தங்கள் உடலை வருத்திக்கொண்டாலும், இயேசுவை தவிர வேறொருவரும் பாவமன்னிப்பின் நிச்சயத்தை கொடுத்து, நம்மை ஆனந்த தைல அபிஷேகத்தினால் நிரப்பமுடியாது. ஆகையால், இயேசுவிடம் திரும்பிவிடுங்கள். அப்பொழுது உங்கள் பாவம் சிவேரென்றிருந்தாலும், உறைந்த மழையைப்போல பஞ்சைப்போல் வெண்மையாகும். உங்கள் பாவங்களை சிலுவையிலறையப்பட்ட இயேசு நிச்சயம் மன்னிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org