வேதனையின் உச்சக்கட்டம் (The pinnacle of agony)

மத் 27:46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sipdssgYB4s

நம்முடைய நெருங்கிய பாசத்துக்குரிய உறவுகள், பிள்ளைகள் தொலைதூர பட்டணங்களுக்கு செல்லும்போது, நமக்கு மனது கடினமாக இருக்கும். அந்த பிரிவை தாங்கிக்கொள்ளாமல் சிலர் கண்ணீர் விட்டு அழுவார்கள். இந்த உறவுகளைக்காட்டிலும் பிதாவுக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த உறவு மிகவும் வலிமை வாய்ந்தது, மிகவும் ஆழமானது, தெய்வீகமானது. இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போது, இவர்களுக்கிடையே இருந்த உறவு சில நிமிடங்கள் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலை வந்தது. இவ்வுலகத்தில் யாருடைய உறவும், சில கோபங்கள் சண்டைகளால் துண்டிக்கப்படும். ஆனால் பிதாவுக்கும் இயேசுவுக்கும் நடுவே இருந்த உறவு சில நிமிடங்கள் துண்டிக்கப்பட்டதிற்கு, நம்முடைய பாவங்களே காரணம். இயேசு பிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். பிதாவும் இயேசுவும் எப்பொழுதும் ஒன்றாக தான் காணப்படுவார்கள். இப்பொழுது பிதா தன்னுடைய முகத்தை இயேசுவுக்கு மறைக்கும் நேரம் வந்தது. காரணம், ஏசா 59:2ன் படி, உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது என்று எழுதியிருப்பதைப்போல, நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் இயேசு சிலுவையில் சுமத்தபோது, பிதாவின் முகம் இயேசுவுக்கு மறைக்கப்பட்டது. இந்த பிரிவின் வேதனை, அவருக்கு இருந்த சரீர வேதனையை காட்டிலும் அதிகமாக இருந்தது. இயேசு அனுபவித்த இந்த வேந்தனைதான், மனுக்குலத்தின் வேதனைகளெல்லாவற்றிலும் அதிகமான வேதனை. இந்த வேதனையினிமித்தம், சிலுவையில் வந்த இயேசுவின் நடுக்கதறல் தான், என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்பது. இவற்றை இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் சகித்தார்.

நம்முடைய உறவு, ஆண்டவரோடு சீராக இருக்கும்பொருட்டு, பிதாவின் முகம் மறைக்கப்படுவதை இயேசு ஏற்றுக்கொண்டார். இன்றைக்கு இம்மானுவேல் என்னும் நாமத்தை உடையவர் நம்மோடு இருக்கிறார். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். அவர் நம்மோடு இருப்பதை சிலுவையை தியானிக்கிற இந்நாட்களில் நாம் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மார்ட்டின் லூத்தர் என்ற தேவமனிதர் சொன்னார், கிறிஸ்து இருந்தால் சிறையும் சிம்மாசனம்; கிறிஸ்து இல்லையேல் சிம்மாசனமும் சிறைதான் என்பதாக. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை, அது ஒன்றுக்கும் பிரயோஜமில்லாத வாழ்க்கை. அவரோடு இருக்கும் உறவை இன்னும் அதிகமாக்கி கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org