அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? (யோசுவா 7:10).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WNBd0KlqWO0
யோசுவாவும், அவன் ஜனங்களும் எரிகோ பட்டணத்தை கர்த்தருடைய வார்த்தையின்படி செய்து பிடித்துக் கொண்டார்கள். அதற்குப் பின்பு ஆய் பட்டணம் அவர்களுக்கு முன்பாகக் காணப்பட்டது. எரிகோவைப் போல் எளிதாய் ஆய் பட்டணத்தைப் பிடித்துவிடலாம் எனக் கருதி, கர்த்தரிடத்தில் விசாரிக்காமல் இரண்டாயிரம் மூவாயிரம் பேரை அனுப்பினால் போதும் என்று கூறிய மனிதர்களின் வார்த்தைகளைக் கேட்டு, யோசுவா அவ்வாறு செய்தான். பெரிய தோல்வி இஸ்ரவேல் சேனைக்கு உண்டானது, அவர்களில் முப்பத்தாறு பேரை ஆய்பட்டணத்தின் குடிகள் வெட்டிப் போட்டார்கள். அந்த தோல்வியின் நிமித்தம் யோசுவா முகங்குப்புற விழுந்து காணப்பட்டான், இஸ்ரவேல் ஜனங்களுடைய மூப்பர்களும் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக விழுந்தார்கள். அதற்குக் காரணம் ஏழு ஜாதிகளையும் முப்பத்தியொரு ராஜாக்களையும் அவர்கள் வீழ்த்தவேண்டும். துவக்கத்திலேயே தோல்வியைச் சந்தித்தால் இஸ்ரவேல் ஜனங்களுக்குள் சோர்வு வந்துவிடும், எதிரிகளின் கை ஓங்கிவிடும் என்று பயந்தான். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் கடினமான சூழ்நிலையில் காணப்பட்ட வேளையில் நாங்கள் எகிப்தில் காணப்பட்டிருந்தால் நலமாயிருக்கும் என்றதைப் போல, யோசுவாவும் நாங்கள் யோர்தான் நதிக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாய் இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும் என்று அவ்விசுவாச வார்த்தைகளைப் பேசினான். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொரு காரியங்களையும் கர்த்தரிடத்தில் விசாரித்து, ஜெபித்துச் செய்ய வேண்டும். ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டோம் என்று கருதி அடுத்த முறை ஆண்டவரிடம் விசாரிக்காமல் ஒன்றையும் செய்துவிடக் கூடாது. அதினிமித்தம் பல தோல்விகளைச் சந்தித்தும், பலரால் ஏமாற்றப்பட்டவர்களாயும் நாம் காணப்படக்கூடும். சிறிதானதோ, பெரிதானதோ எல்லாக் காரியங்களையும் கர்த்தரிடம் விசாரித்துச் செய்யுங்கள்.
யோசுவா, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் எத்தனை நாட்கள் முகங்குப்புற விழுந்து காணப்பட்டாலும் பிரயோஜனம் ஒன்றும் இல்லை, அவனுக்கு வெற்றிக் கிடைக்கப்போவதும் இல்லை. பாளயத்தில் அசுத்தம் காணப்படுகிறது, சபிக்கப்பட்ட எரிகோவின் பொருட்கள் காணப்படுகிறது, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், அவருடைய வார்த்தையை மீறி, ஆகானால் திருடப்பட்ட பொருட்கள் காணப்படுகிறது. அதைச் சீர்படுத்தாதபடிக்கு எத்தனை நாட்கள் யோசுவா முகங்குப்புற விழுந்து ஜெபித்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அனேக வேளைகளில் நாமும் யோசுவாவைப் போலக் காணப்படுகிறோம். பலநாட்களாய் ஜெபங்களை ஏறெடுக்கிறோம், ஆனால் பதில் ஒன்றையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளமுடியவில்லை. நாம் நம்மை உய்த்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். கர்த்தரை வேதனைப் படுத்துகிற காரியங்கள் நம்மிலும், நம்முடைய குடும்பங்களிலும் காணப்படுகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். கர்த்தர் ஜெபங்களைக் கேளாதபடிக்கு ஏன் தன்னை மேகத்தால் மூடிக்கொள்ளுகிறார் என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். துன்மார்க்கருடைய ஜெபம் கர்த்தருக்கு அருவருப்பு, செம்மையானவர்களுடைய ஜெபம் அவருக்குப் பிரியம் என்று வேதம் கூறுகிறது. யோசுவா, எரிகோவின் சாபத்தீடுகளைப் பாளயத்திலிருந்து அப்புறப்படுத்தின உடனே கர்த்தர் ஜெயத்தைக் கட்டளையிட்டார். அதுபோல உங்களில் காணப்படுகிற கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களை நீங்கள் விலக்கிவிடும் போது, ஆண்டவர் உங்கள் ஜெபங்களைக் கேட்டு, உங்களுக்கு ஜெயத்தைக் கட்டளையிடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae