யோவா 19:30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7gVRMGCB0xY
மேற்குறிப்பிட்ட வசனத்தின் காலம் வரை, பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு கடினமான பலி முறை இருந்தது. பாவம் மக்களை ஆண்டவரிடமிருந்து பிரிக்கிறது, மேலும் ஒரு மிருகத்தின் பலியால், மக்கள் மன்னிக்கப்பட்டு ஆண்டவருக்கு முன்பாக சுத்திகரிக்கப்பட முடியும். ஆனால் மக்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள், எனவே அடிக்கடி பலிகள் செலுத்தப்படுவது அந்நாட்களில் தேவைப்பட்டது. ஆகையால், இயேசு பாவத்திற்கான கடைசி பலியாக தம்மை தாமே ஒப்புக்கொடுத்து, முடிந்தது என்று சொன்னார். ஆங்கிலத்தில் இதை, It is finished என்றும் Paid in Full என்றும் சொல்லலாம். இந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. தீர்க்கதரிசிகள் சொன்னது போலவே, அனைத்தும் நிறைவேறியிருந்தது. முடிந்தது! இரட்சிப்பு நிறைவேறியது. அதாவது நம்மை மீட்டெடுக்க என்ன கிரயத்தை செலுத்தவேண்டுமோ, அதை முழுமையாக செலுத்தி, முடிந்தது என்ற வெற்றிக்குரல் சிலுவையிலிருந்து இயேசுவின் வாயிலிருந்து வந்தது. இனி செலுத்தப்பட வேண்டிய கடன் ஒன்றும் இல்லை. இயேசு இரட்சிப்பிற்கான எல்லா வேலையையும் செய்து முடித்தார். நமது பாவங்களுக்கான முழு தண்டனையையும் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் மரணத்துடன், கடினமான சிக்கலான பலி முறை முடிவுக்கு வந்தது. ஏனென்றால் இயேசு எல்லா பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசு நமக்காக பலியிடப்பட்டதன் காரணமாக இப்போது நாம் தேவனை சுதந்திரமாக அணுகலாம். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டவர்கள், தேவனுடன் நித்தியமாக வாழலாம் மற்றும் பாவத்திலிருந்து வரும் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அவர் தலையை சாய்த்து, தனது ஆவியை ஒப்புக்கொடுத்தார். இயேசு தானாக முன்வந்து தனது ஆவியை தேவனிடம் ஒப்படைத்ததை, லூக்கா பதிவு செய்கிறார். பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன் என்று லூக்கா 23:46 கூறுகிறது. இயேசுவின் உயிர் அவரிடமிருந்து எடுக்கப்படவில்லை; அவர் தனது சொந்த விருப்பப்படி தனது உயிரைக் கொடுத்தார். இது இயேசுவின், எல்லாவற்றிற்கும் மேலான தெய்வீகத்தன்மையை காட்டுகிறது; அவர் தனது மரணத்தைக் கூட கட்டுப்படுத்தினார்.
யோவானின் சுவிசேஷத்தில், நம் ஆண்டவரின் மரணத்தின் பல அடையாளங்களை நாம் காணலாம். உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி(1:29); இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார் (2:19);சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் (3:14); ஆடுகளுக்காக மேய்ப்பன் தனது உயிரைக் கொடுத்தார் (10:11–18); கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும் (12:20–25). இந்த அடையாளங்கெல்லாம், இயேசுவின் மரணம் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றது. அது ஒரு தெய்வீக நியமனம். அவர் மிகவும் கண்டிப்பான அர்த்தத்தில் கொலை செய்யப்படவில்லை. அவர் மனமுவந்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அவரது மரணம் ஒரு பாவநிவாரணமாகும், வெறும் ஒரு உதாரணம் அல்ல. அவர் உண்மையில் சிலுவையில் மீட்பின் வேலையை நிறைவேற்றினார். இதன் நிறைவாகவே இயேசு முடிந்தது என்று மிகுந்த சத்தமிட்டு வெற்றியின் ஜெயதொனியோடு சொன்னார். இதுவே வெற்றிகளிலெல்லாம் மிகப்பெரிய வெற்றி.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org