இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள், நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள் (மாற்கு 14:8).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5ocLH6f46lM
இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டு மரிப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு, அவரை அடக்கம் பண்ணுவதற்கு அடையாளமாக, மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள் விலையேறப்பெற்ற பரிமளதைலத்தை, வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்து, அதை உடைத்து ஆண்டவருடைய சிரசின் மேல் ஊற்றினாள். அந்த வீடு பரிமளதைலத்தின் வாசனையால் நிறைந்தது. சீஷர்கள் அதைப்பார்த்துக் கோபமடைந்தார்கள், யூதாஸ் பரிமள தைலத்தை முந்நூறு பணத்திற்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றான். ஆனால் இயேசு, மரியாள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என்றும், இந்த சுவிசேஷம் எங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்றார். மரியாள் செய்த ஒரு நற்கிரியையின் நிமித்தம் அவள் என்றென்றும் நினைவு கூறப்படுகிற பாத்திரமாய் மாறினாள்.
உங்களால் இயன்றதைக் கர்த்தருக்கு முழு மனதோடும், முழு உள்ளத்தோடும், முழு பலத்தோடும் செய்யும் போது, அவர் உங்கள் நற்கிரியைகளை நினைத்து உங்களை ஆசீர்வதிப்பார். நான்குபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு ஆண்டவரிடத்தில் வந்தார்கள். அவன் சுகமடைவதற்கு தங்களால் இயன்றதை அவர்கள் செய்தார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனுக்கு அற்புதம் செய்தார். சிறுவன் ஒருவன் தன்னால் இயன்ற ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆண்டவரிம் கொடுத்து ஐயாயிரம் பேர் போஷிக்கப்படுவதற்குக் காரணமானான். ஏழை விதவை தன்னால் இயன்ற இரண்டு காசுகளை முழு மனதோடு காணிக்கை பெட்டியில் போட்டதினால், ஐசுவரிய வான்களைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டாள் என்று ஆண்டவரால் புகழப்பட்டாள். பேதுரு தன்னால் இயன்ற தன் படகைக் கர்த்தருக்காகக் கொடுத்தார், இயேசு அதிலிருந்து ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார், பின்பு வலை கிழிந்துபோகத்தக்க தாக மிகுதியான மீன்களை அவர்கள் பிடிக்குப்படிக்குச் செய்தார். சாறிபாத் ஊர் விதவை தன்னால் இயன்ற கொஞ்சம் அப்பமும் தண்ணீரும் எலியாவுக்குச் கொடுத்தாள், ஆகையால் பஞ்சகாலம் முழுவதும், பானையின் மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை, அவளும் அவள் குடும்பமும் போஷிக்கப்பட்டது. கிதியோன் அவனுக்கு இருக்கிற பலத்தோடு யுத்தத்திற்குக் கடந்து சென்றதினால், மீதியானியர்களைக் கர்த்தர் அவன் கரங்களில் ஒப்புக்கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் அன்பின் பிரயாசங்களைக் கர்த்தர் ஒரு நாளும் மறப்பதில்லை. அவருடைய நாமத்தின் மகிமைக்காக ஒரு கலசம் தண்ணீர் கொடுப்பவனுக்குக் கூட அதிக பலனுண்டு என்று வேதம் கூறுகிறது. அவருடைய ஊழியத்திற்காக நாம் செலவழிக்கிற நேரங்கள் வீணாய்ப் போவதில்லை. உங்களால் இயன்றதை அவருக்காகச் செய்யும் போது, அதை தன் ஞாபக புஸ்தத்தில் எழுதி வைத்து உங்களை ஆசீர்வதிப்பார், நீங்களும் நினைவு கூறப்படத்தக்கப் பாத்திரங்களாய் மாறுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar