செல்வமா, இரத்தமா? (Rich or Blood ?)

1 பேது 1:18,19 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

For audio podcast of this Manna Today, please click the link, https://www.youtube.com/watch?v=2LwoZ6ilHgA

நம்முடைய கிறிஸ்துவ ஜீவியத்தில் விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னினாலுமான செல்வதை நம்பியல்ல, இயேசுவின் விலைமதிப்பில்லாத இரத்தத்தை நம்பி ஜீவிக்க வேண்டும். இயேசுவின் இரத்தத்திற்குள்ளாக தான் பாதுகாப்பு காணப்படுகிறது. நம்முடைய செல்வங்களினால் இரட்சிப்புமில்லை, பாதுகாப்புமில்லை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் இரட்சிக்கப்படுவதற்கு செல்வம் தடையாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு செல்வந்தன் வந்து, ஆண்டவரை நோக்கி, நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். இயேசு அவனுக்குள்ளிருந்த பண ஆசையை அறிந்து, உனக்குள்ளதை விற்று தரித்திரருக்கு கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். இதை கேட்ட, அந்த செல்வந்தன், இரட்சிக்கப்படாமல், துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான் என்று மத் 19:16-26 வரையுள்ள வசனங்களை வாசித்து அறிந்துகொள்ளலாம். இன்றும் அநேகர் தங்களுடைய செல்வங்களினிமித்தம், பெருமை பிடித்தும், மேட்டிமை கொண்டும், இரட்சிக்கப்படாமல், துக்கமுகமாய் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. இந்த செல்வங்கள் மீது நம்பிக்கைகொண்டு, விலையேற்றப்பெற்ற இயேசுவின் இரத்தத்தை நிராகரித்து, இரட்சிப்பை ஊதாசீனப்படுத்துகிற ஜனங்கள் இந்நாட்களில் அதிகமாய் இருக்கிறார்கள்.

பொருளாசையுள்ளவனுக்கு, ஆண்டவர் வைத்திருக்கும் பெயர் மதிகேடன். லுக் 12:20 கூறுகிறது, மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். இன்றைக்கு அநேகர், படைத்தவரை தொழுதுகொள்ளாமல், படைப்புகளையும், பணத்தையும் தொழுதுகொண்டு, இயேசுவின் இரத்தத்தை சுதந்தரிக்காமல் போய் விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்ற எண்ணமும் வருவதில்லை. எவ்வளவு பொக்கிஷங்கள் சேர்த்துவைத்தாலும், உயிர் பிரியும்போது நாம் ஒன்றும் கொண்டுபோவதில்லை. ஆனால், இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்களின், உயிர் பிரியும்போது, பரலோகத்தில் அவர்கள் சம்பாதித்திருக்கும் பொக்கிஷங்களால் சந்தோஷமடைவார்கள். யோபுவை பாருங்கள், அவன் இயேசுவை சந்தித்த செல்வந்தனை போல அல்ல; அவன் முற்றிலும் மாறுபட்டவன். யோபு அதிகமான பொன் தங்கத்தை உடையவனாக இருந்தாலும், அது என் ஆதரவு என்று சொல்லவில்லை என்று யோபு 31:24-28 கூறுகிறது.

இன்று ஒருவேளை நீங்கள் யாரவது செல்வந்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இது நாளைக்கான முன்னெச்செரிப்பு என்பதை அறிந்துகொள்ளுங்கள். இரட்சிப்பானது விலையுயர்ந்த தங்கத்தினால் அல்ல; கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்டது. ஆகையால், செல்வத்தை நாடாமல், இயேசுவின் இரத்தத்தை நாடுங்கள். அதுவே உங்களுக்கு இரட்சிப்பையும் பாதுகாப்பையும் கொடுக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org