அன்பின் ஆழம் (The depth of Love).

சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன் (எபே. 3:18,19).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/8NRtOLD0qdw

கிறிஸ்து இயேசுவின் அன்பானது அறிவுக்கெட்டாதது. அதின் அகலத்தையும், நீளத்தையும், ஆழத்தையும், உயரத்தையும் ஒருவராலும் ஆராய்ந்து அறியமுடியாது. அவர் செய்த தியாகத்தை வைத்தும், செலுத்தின கிரயத்தை வைத்தும் ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஒருவன் தன் சினேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று யோவான் 15:13 கூறுகிறது. நாம் பாவிகளாய் காணப்பட்ட வேளையில், அன்பிற்குப் பாத்திரவான்களாய் காணப்படாத வேளையில், அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்து ஜீவனைக் கொடுத்தார். அவருடைய காயங்களின் ஆழத்தை நோக்கிப் பார்க்கும் போது அவர் நம்மேல் கொண்ட அன்பை அறியமுடிகிறது. ஆணிகளினால் கரங்களும் கால்களும் கடாவப்பட்ட வேளையில் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் ஆணிகள் பாய்ந்து சென்றது. தலையில் முள்முடியைச் சூட்டி அடித்த வேளையில், முற்கள் கண்கள் வழியாக வெளியே வந்தது. ஈட்டியினால் விலாவில் குத்தின வேளையில், ஈட்டியானது ஆழமாய் பாய்ந்து சென்றதினால் இரத்தத்தோடு தண்ணீரும் புறப்பட்டு வந்தது. எலும்புத்துண்டுகளைக் கட்டி வாரினால் இயேசுவின் முதுகை அடித்த வேளையில், எலும்புத்துண்டுகள் சதைநாரின் ஆழத்தில் சென்று, சதையின் பல அடுக்குகளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அவருடைய காயத்தின் ஆழத்தை வைத்து, அவருடைய தியாகமான அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.


கர்த்தருடைய பிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து ஜீவியுங்கள். பேதுருவைப் பார்த்து நீ என்னில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு கேட்டதைப் போல, நம் ஒவ்வொருவரிடமும் ஆண்டவர் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்கிறார். கடைசி நாட்களில் அக்கிரமங்கள் மிகுதியாய் காணப்படுவதினால் அன்பு தணிந்து போன நிலை எங்கும் காணப்படுகிறது. புறஜாதிகள் மத்தியில் அல்ல, கர்த்தருடைய ஜனங்கள் என்று அழைக்கப்படுகிறவர்களின் நடுவில் அன்பு தணிந்து போய் காணப்படுகிறது. அன்பு கூர்ந்து கர்த்தரை ஆராதிப்பதில் குறைவு காணப்படுகிறது. தியாகமான அன்போடு ஊழியம் செய்வதில் குறைவு காணப்படுகிறது.   மரியாள் வெள்ளைக்கல் பரணியை உடைத்து விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை  இயேசுவின் சிரசின் மேல் ஊற்றி அன்புகூர்ந்ததைப் போல, கிரயம் செலுத்தி அன்பு கூருகிற விசுவாசிகள் குறைந்து போனார்கள். ஒரு சிறிய கஷ்டம், பாடுகள் கூட ஆண்டவருடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கிறது. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ, இப்படிப்பட்ட ஒன்றும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்ற பவுலைப் போல நிச்சயமுள்ளவர்கள் குறைந்து போனார்கள். நீங்கள் ஆண்டவர் பேரில் கொண்ட அன்பின் ஆழத்தை நீங்கள் கர்த்தருக்காகச் செய்கிற தியாகமான காரியங்களில் வெளிப்படுத்துங்கள். அப்போது உங்களைக் குறித்து கர்த்தருடைய இருதயம் மகிழும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae