எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய் (You reap what you sow).

மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப்  பரியாசம்பண்ணவொட்டார்,  மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா. 6:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2ilpa0BwEQo

கர்த்தருடைய வருகையின் நாட்களில் நாம் காணப்படுகிறோம்.  இந்த கடைசி நாட்கள் மகா கொடிய காலமாய் காணப்படுகிறது. உண்மையும், உத்தமும், நேர்மையும், ஒழுக்கமும் எங்கும் குறைந்து காணப்படுகிறது.  உலகத்தின் ஜனங்கள், பூமியெங்கும் உலாவுகிற கர்த்தருடைய கண்கள் அவர்களைக் காண்கிறது என்ற அறிவு இல்லாமையால் அப்படிப்பட்டவர்களாய்  காணப்படுகிறார்கள். ஆனால் கர்த்தரைத்   தெய்வமாய் கொண்ட ஜனங்களும் கூட துன்மார்க்கர்களாய், ஏமாற்றுகிறவர்களாய், பொய் சொல்லுகிறவர்களாய், வஞ்சிக்கிறவர்களாய், நம்பத்தகாதவர்களாய், நன்றியறிதல் இல்லாதவர்களாய், திருடுகிறவர்களாய் கர்த்தரைக் குறித்த பயமில்லாமல்  வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. இப்படிப்பட்டவர்களுடைய சாட்சியற்ற வாழ்க்கையால் ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வசனம் கலாத்திய சபை விசுவாசிகளுக்கும், இயேசுவைப் பின்பற்றுகிற  அனைவர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். உலக  மனுஷர்களுக்கும்  கிறிஸ்தவர்களுக்கும் அது பொருந்தும்.   அநியாயத்தையும், தீவினையையும் விதைக்கிறவன் அதையே அறுப்பான், மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் அதற்குரிய பலனை அறுப்பான், நீதிக்கென்று விதைக்கிறவன் நீதியின் பலனை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் அதற்குரிய பலனை அறுப்பான். ஆண்டவர் இரக்கமுள்ளவரும் கிருபையுள்ளவருமாய் இருந்தாலும், தங்கள் துர்க்குணத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து அதில் காணப்படுகிறவர்கள் அதின் பலனை அறுக்கும் படிக்குச் செய்கிறவர்.

யோசுவா மரித்த பின்பு, கானானியரையும் பெரிசியரையும்  எதிர்த்து இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தம் செய்தார்கள். அவர்கள் பேசேக்கிலே  அதோனிபேசேக் என்ற கானானிய ராஜாவைக்; கண்டு, அவன்  ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள். இது கொடூரமாய் காணப்பட்டாலும்,  அதோனிபேசேக்கின் வாயிலிருந்து வந்த  வார்த்தைகளைப் பார்க்கும்போது, அவன் எதை விதைத்தானோ, அதையே அறுக்கும்படிக்குச் கர்த்தர் செய்தார். அவன்,  எழுபது ராஜாக்கள் கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள், நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்று கூறியதை நியாதி. 1:7ல் வாசிக்கிறோம். சாமுவேல் தீர்க்கதரிசி  அமலேக்கின் ராஜாவாகிய  ஆகாகைப் பார்த்து, உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான் என்று 1 சாமு.15:33ல் எழுதப்பட்டிருக்கிறது. அதுபோல யாக்கோபு தன் சகோதரனையும், தகப்பனையும் ஏமாற்றினான். பின்பு அவன் லாபானால் ஏமாற்றப்பட்டான். அவன் திருமணத்தில் கூட ஏமாற்றப்பட்டான். 

கர்த்தருடைய பிள்ளைகளே, ஆவிக்குரியவர்கள் என்று அழைக்கப்படுகிற நீங்கள் நன்மையையும், நீதியையும், இரக்கத்தையும், அன்பையும், உத்தமத்தையும்  விதையுங்கள்.  உண்மையுள்ளவர்கள்  மனுப்புத்திரரில்  குறைந்திருக்கிற இந்த நாட்களில் நீங்கள் உண்மையுள்ளவர்களாய் ஜீவிக்க உங்களை முழுமையுமாய் அர்ப்பணியுங்கள். உங்கள் சாட்சியை ஒருநாளும் இழந்து போகாதிருங்கள்.  அப்போது உண்மையுள்ள மனுஷன், பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்ற வசனத்தின்படி,  கர்த்தரிடத்திலிருந்து நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் ஏற்றக் காலத்தில் அறுவடை செய்வீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae