இரத்தத்தின் பெருந்துளி (Great drops of blood).

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின்  பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது (லூக்கா 22:44).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2trP4Yvw28E

வேதத்தின் இரண்டு முக்கியமான தோட்டங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒன்று ஏதேன் தோட்டம், இன்னொன்று  கெத்சமனே தோட்டம். தேவகட்டளைக்கு கீழ்ப்படியாமல், சத்துருவின் நயங்காட்டுதலில் நாட்டம் கொண்டு, ஆதிப் பெற்றோர் பாவம் செய்து வீழ்ந்து போன இடம் ஏதேன் தோட்டமாய் காணப்படுகிறது.  இயேசு, தேவனுடைய கட்டளைக்கு  முழுவதும் கீழ்ப்படிந்து,   அவருடைய  சித்தத்திற்குத் தன்னை பூரணமாய் அர்ப்பணித்த இடம் கெத்சமனே  தோட்டமாய் காணப்படுகிறது. கெத்சமனே என்பதின் அர்த்தம் எண்ணைச் செக்கு என்பதாகும். இயேசு தன்னை ஒரு ஒலிவப்பழத்தைப்  போல  முழுவதுமாய் கசக்கிப்பிழிவதற்கு ஒப்புக்கொடுத்து இடம் கெத்சமனே தோட்டமாகும். இங்குதான் அவர் முதல்முதலாக இரத்தம் சிந்தினார். அவருடைய வியாகுலம் மிகவும் அதிகமாய் காணப்பட்டதினால், அவருடைய இரத்த நாளங்கள் வெடித்தது, ஆகையால் இரத்தம் வேர்வையோடு கலநதுபெருந்துளியாய் தரையில் விழுந்தது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வியாகுலங்களைக் கர்த்தர்  அறிவார். யாக்கோபின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம், அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்று கூறியதைக்  கேட்டவுடன் யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டான் என்று ஆதி.32:7ல் எழுதப்பட்டிருக்கிறது. யோசேப்பின் சகோதரர்கள் அவனைக் குழியில் போட்ட வேளையில், அவன் மிகுந்த வியாகுலத்தோடு அவர்களிடம் கெஞ்சினான் என்று ஆதி. 42:21 கூறுகிறது.  யோனத்தானுடைய மரணத்தினிமித்தம்  தாவீது மிகுந்த வியாகுலப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. இவர்களைப் போலப் பலவிதமான வியாகுலங்கள்  உங்களைப் பிடித்திருக்கலாம். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததின்  நிமித்தம் உங்கள் இருதயம் வியாகுலத்தினால் நிறைந்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளும், நெருக்கங்களும் உங்களை  வியாகுலப்படுதலாம்.  உங்களுக்குக் காணப்படுகிற தரித்திரமும், பற்றாக்குறைகளும் உங்களை வியாகுலப்படுத்தக்கூடும். ஊழியங்களின் பாதைகளில் ஏற்படுகிற ஏமாற்றங்கள் உங்களை வியாகுலப்படுத்தலாம். வியாதிகளின் படுக்கைகள் உங்களுக்கு மிகுந்த வியாகுலத்தையும் மனக்கிலேசத்தையும் கொடுக்கலாம். இயேசு, சிலுவைக்கு முன்பு அதிகமாய் வியாகுலப்பட்டார். இந்தப் பாடுகளின் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும் படிக்குச் செய்யும் என்று கதறினார். அவருடைய மிகுந்த வியாகுலம், அவருடைய இரத்த நாளங்களை வெடிக்கும்படிக்குச்  செய்தது. ஆகையால் உங்கள் எல்லா வியாகுலங்களையும் வேதனைகளையும் அவர் முற்றிலும் அறிவார். அவர் உபத்திரவப்படுகிறவர்களுடைய  உபத்திரவத்தை   அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், அவர்களுக்கு தம்முடைய முகத்தை   மறைக்காமலுமிருந்து,   தம்மை நோக்கிக் கூப்பிடுகையில்   கேட்டருளி அவர்களுக்குப் பதில் செய்கிறவர். ஆகையால் உங்கள் வியாகுல வேளைகளில் ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் வேண்டுதலைக் கேட்டருளி உங்கள் வியாகுலங்களிலிருந்து விடுதலையைத் தருவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae