மூன்று சிலுவைகள் (Three crosses).

2 கொரி 5:21. நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fVF-qlEW5zQ

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அவரோடு கூட மற்ற இரண்டு கள்ளர்கள் சிலுவையில் தொங்கினார்கள். ஆகையால், மொத்தம் மூன்று சிலுவைகள் கொல்கொதா மலையில் ஒரே நேரத்தில் காணப்பட்டது. அதில் ஒரு சிலுவை நீதிமானாக்கும் சிலுவை, இரண்டாவது சிலுவை ஆக்கினை தீர்ப்பு கொடுக்கும் சிலுவை. மூன்றாவது சிலுவை, பாவமாக்கப்பட்ட சிலுவை.

அவர்களில் ஒருவன் சொல்லுவான், மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று கூறுவான். இரண்டு பேரும் கள்ளர்கள், அவர்கள் நியாயப்படி சிலுவையில் தொங்கினார்கள். ஆனால், இயேசுவோ ஒரு குற்றமும் செய்யாமல், தகாததொன்றையும் நடப்பிக்காமலிருந்தும் நமக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

சிலுவையில் தொங்கின ஒரு கள்ளன் மனம் திரும்பினான். ஒரு சிலுவை ஒருவனை நீதிமானாக மாற்றியது. லுக் 23:42-43 வசனங்கள் கூறுகிறது, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இப்படியே, நமக்கும் சந்தர்ப்பமும், வாய்ப்பும் கிடைக்கிற இந்நாட்களில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவோடு ஒப்புரவாகிறவர்களாக காணப்பட வேண்டும். அப்போழுது, நாம் நீதிமானாக்கப்படுவோம்.

சிலுவையில் தொங்கின மற்றொரு கள்ளன் ஆண்டவரை இகழ்ந்தான்; அவன் ஆக்கினை தீர்ப்படைந்தான். நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான் என்று லுக் 23:39 கூறுகிறது. இந்த கள்ளனை போல சுபாவம் நமக்கிருக்குமென்றால், ஆக்கினைக்கு பாத்திரவான்களாக இருப்போம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு பேருக்கும் நடுவில் இருக்கும் சிலுவையில் தொங்கியவர் ஒரு பாவமும் செய்யாத இயேசு கிறிஸ்து. இந்த சிலுவை பாவமாக்கிய சிலுவை. இயேசு பாவியல்ல; அவர் பாவமாக்கப்பட்டார். நம்முடைய பாவங்களை அவர் சுமந்ததால், அவர் பாவமாக்கப்பட்டார். ரயில் நிலையத்திற்கு பெரிய பெரிய பயண சாமான்களை பெட்டியில் நிறைத்து செல்லும்போது, அதை தூக்கி கொண்டு நடக்க கடினமாக இருக்கும். அதுபோல, பாவம் நிறைந்த உலகில் பாவத்தை தூக்கி கொண்டு வெற்றிகரமாக ஓடுவது இயலாத காரியம். அந்த பயண சாமான்களை தூக்குவதற்கு Porter என்றழைக்கப்படும் சுமைதூக்குபவரை பயன்படுத்துவோம்; அவர் சுமந்து செல்லுகிற பெட்டி நம்முடையது, ஆனால், அதை கடினமாக சுமப்பவர் மற்றொருநபர். அதுபோல தான், நம்முடைய பாவம் என்னும் பெரிய சுமையை, வேறு யாராலும் சுமக்க முடியாத, அரிதான சுமையை இயேசு சுமந்தார். இயேசு சிலுவையில் சுமந்த அந்த சுமை நம்முடைய பாவங்கள். பயண பெட்டியை தூக்கிக்கொண்டு சென்ற நபர், அதற்கு பரிகாரமாக நம்மிடம் பணத்தை வாங்கிக்கொள்ளுவார். ஆனால், இயேசுவோ, நம்முடைய பாவங்களை சுமக்க, அவரே முன்வந்து விலைமதிப்பில்லாத இரத்தத்தை கொடுத்து நம்முடைய பாவங்களை சுமந்தார். இவ்வாறாக, இயேசு சிலுவையில் பாவமாக்கப்பட்டார். இந்த சிலுவையிடம் வந்துவிடுங்கள். இங்கே தான் இரட்சிப்பு, இங்கே தான் பாதுகாப்பு, இங்கே தான் சமாதானமும் சந்தோஷமும் ஆசிர்வாதமும் நிறைந்து காணப்படுகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org