அவமானமும், உமிழ்நீரும்(Shame and Spitting).

அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடை மயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை (ஏசாயா 50:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mljpJ-fh1wU

இயேசு சிலுவையில் ஜீவனை நமக்காகக்  கொடுப்பதற்கு முன்பு மிகவும் அவமானப்படுத்தப் பட்டார். அவருடைய முகத்தில் துப்பினார்கள். முகத்தில் துப்புவது மிகுந்த அவமானப் படுத்துவதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது. யோபு பாடுகளின் பாதையில் கடந்து சென்ற வேளையில், அவனுடைய சூழ்நிலையைக் கண்டு, அவனை அவமானப்படுத்தும் படிக்கு, அவன் முகத்திற்கு முன்பாக துப்ப கூசாதிருக்கிறார்கள் என்றான் என்பதை யோபு 30:10ல் வாசிக்கிறோம். முகத்திற்கு முன்பாக தரையில் துப்புவதைக் கூட யோபு அவமானமாகக் கருதினான்.  ஆனால் இயேசுவின்  சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள், அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள் என்று மாற்கு 15:19,20 கூறுகிறது. ஆண்டவருடைய முகத்தில் துப்பி அவமானப்படுத்தின வேளையில் கூட, நமக்காக அதைச் சந்தோஷத்தோடு   ஏற்றுக் கொண்டார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் அவமானத்தை ஏற்றுக் கொண்டதின் காரியம், நீங்கள் ஒருபோதும் அவமானப்படக் கூடாது என்பதற்காக என்பதை அறிந்து கொள்ளுங்கள்.   ஏதாவது ஒருகாரியத்தைக் குறித்து  அவமானமாக நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், ஆண்டவர் உங்கள் நிந்தைகளையும் அவமானங்களையும் ஏற்கனவே சிலுவையில் சுமந்து தீர்த்தார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லாமல் இருந்ததினால் அவளுடைய சக்களத்தி அவளை விசனப்படுத்தி, மனமடிவாக்கி, அவமானப்படுத்தினாள். கர்த்தர் ஒருநாள் அவளுடைய   நிந்தையைப் புரட்டிப்போட்டார். லேயாள் கூச்சப்பார்வை உடையவளாய் காணப்பட்டதின் நிமித்தம் எல்லாராலும் அற்பமாய் கருதப்பட்டாள். ஆனால் அவள் யாக்கோபுக்கு அனேக குமாரர்களையும் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவனோடு கல்லறையில் அடக்கம்பண்ணப்படுகிற பாக்கியத்தையும் பெற்றாள். யாபேஸ் பிறந்த வேளையில் அவன் தாய் மரித்துப்போனாள், அவள் மரிப்பதற்கு முன்பு அவனுக்கு துக்கத்தின் மகன் என்று அர்த்தம் கொள்ளும் யாபேஸ் என்ற பெயரை வைத்தாள். தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு அவனை ஆசீர்வதித்து, சகோதரர்கள் நடுவில் அவனைக் கனத்திற்குரிய பாத்திரமாய் மாற்றினார்.

இயேசு கல்வாரிச் சிலுவையில் உங்கள்நிந்தைகளை மாற்றியதுமில்லாமல், அதற்குப் பதிலாக உங்கள் வாழ்க்கையில் கனத்தைத் தருகிறவர். ஆகையால் இயேசுவைப் போல, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்பட்டேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப் போலாக்கினேன் என்று நீங்களும் அறிக்கைச் செய்யுங்கள். உங்கள் நிந்தைகள் நிரத்தரமானவைகள் அல்ல என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையான பலன் வருகிறது, உங்கள் இலச்சைக்குப் பதிலாக நீங்கள் சந்தோஷப்படும் நாட்கள் துரிதமாய் வருகிறது, நீங்கள் இரட்டிப்பான சுதந்தரத்தை அடைந்து மகிழ்ச்சியாய் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae