ஜெபம் என்றால் என்ன? (What is prayer?)

மாற்கு 11:24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Yp6MsRFIP7I

அநேகருக்கு ஜெபம் என்றால் ஏதோ புரியாத புதிர் போலவும், புரிந்துகொள்ளமுடியாத ஒரு சொல் போன்றும், மிகவும் கடினம் வாய்ந்த ஒரு வார்த்தை என்றும், இதை செயல்படுத்துவதும் கடினம் என்ற மனப்பான்மையிலும் இருக்கிறார்கள். ஜெபம் என்பது என்ன? ஜெபம் என்பது ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுவது. ஆண்டவரிடம் கேட்பது மாத்திரமல்ல; கேட்பதை பெற்றுக்கொள்ளுவது தான் ஜெபம். நீங்கள் இயேசுவின் நாமத்தில் எவைகளை கேட்பீர்களோ, அவைகளை நீங்கள் பெற்றுகொள்ளுவீர்கள். கடினமான காரியங்களை எளிதாக முடிக்க ஜெபம் அவசியம். முடியாத காரியத்தை முடித்துவைக்கவும், அரிதான காரியத்தை எளிதாக பெற்றுக்கொள்ளவும் ஜெபம் மாத்திரமே நமக்கு ஒரு வழி. நம்மால் செய்ய முடியாத கடினமான காரியங்களை ஜெபத்தில் ஆண்டவரிடம் கேட்கவேண்டும்.

நம் ஒவ்வொருவருக்கும் முதலாவது தனி ஜெபம் கட்டாயம் வேண்டும். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் என்று மத் 6:6ல் இயேசு கூறினார். தனி ஜெபத்தில் நல்ல ஆரோக்கியத்தை கேளுங்கள், வாழ்க்கைக்கு வேண்டிய ஞானத்தை கேளுங்கள், கர்த்தரிடம் அபிஷேகத்தை, ஆவிக்குரிய வரத்தை கேளுங்கள். ஆவியின் கனியினால் நிரம்பி வழியும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். பரிசுத்தத்தை காத்துக்கொள்ள ஆண்டவரிடம் உதவியை நாடுங்கள். உங்களுக்கு வேண்டியவைகள் எல்லாவற்றையும் ஆவியானவர் ஏவுதலின்படி, அவர் சித்தத்தை அறிந்து ஆண்டவரிடம் கேளுங்கள். கர்த்தர் அதை செய்துமுடிப்பார்.

அதுபோல அதிகாலை எழுந்து ஜெபம் செய்யுங்கள். இயேசு இருட்டோடு எழுந்து அதிகாலையில் தனித்திருந்து ஜெபம் செய்தார். குறைந்தது ஐந்து மணிக்கவாது எழுந்து ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து, புதிய கிருபைகளை ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் கிருபை காலைதோறும் புதியது. என்றோவொரு நாள் கிடைத்த கிருபை போதும் என்ற மனப்பான்மையில் ஒருநாளும் இருந்துவிடாதிருங்கள். ஒவ்வொருநாளும் நாம் புதிய கிருபையை ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண்டவரிடம் மன்றாடி ஜெபம் செய்யுங்கள். தேவனுடைய கோபத்தை தடுத்து நிறுத்துகிறவனே மன்றாட்டு ஜெப வீரன். நீங்கள் வாழ்கிற தெருவில், கடைசி வீட்டில் தீப்பிடித்து எரிகிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசிவீடு தானே தீப்பிடித்து எரிகிறது என்று நிம்மதியாக தூங்க உங்களால் முடியுமா? அப்படி தூங்குவீர்களென்றால், அந்த வீட்டிலிருக்கும் தீ அருகிலிருக்கும் மற்ற வீட்டிற்கு பரவும். அங்கே இருந்து மற்ற வீட்டிற்கு பரவும், அப்படியே பரவி பரவி கடைசியில் உங்கள் வீட்டை பிடிக்கும். இதுபோல தான் கொரோனா என்ற வியாதி நான் இருக்கும் தேசத்திலிருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சீனாவில் தான் வந்ததிருக்கிறது என்றெண்ணி, அநேக கிறிஸ்தவர்கள் விழித்துக்கொள்ளாமல், தூங்கிவிட்டார்கள். கடைசியில் அது தாங்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது. தூரத்தில் வரும் ஆபத்தை அறிந்து தேவ கோபத்தை நிறுத்த மன்றாட்டு ஜெப வீரர்கள் இன்று சபைக்கு தேவை. அப்படிப்பட்ட ஜெபவீரர்கள் தான் சபைக்கு கிடைக்கும் பொக்கிஷங்கள், அவர்கள் தான் தேசத்திற்கு கிடைக்கும் ஆசீர்வாதமான பாத்திரம். நாம் அனைவரும் நம்முடைய தேசங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றால், மன்றாட்டு ஜெப வீரர்களாக மாறவேண்டும். அப்படியாக நாம் ஆண்டவரிடம் கேட்பதை நிச்சயம் பெற்றுக்கொள்ளுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org