பொறுமையுள்ளவர்களுக்கான வாக்குத்தத்தம் (Promise for those who are patient).

எபி 6:15. அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/npRsJn-wli0

பொறுமையுள்ளவர்கள் வாக்குத்தத்தை சுதந்தரிப்பார்கள். ஆண்டவர் ஆபிரகாமுக்கு ஒரு குமாரனை கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணினார். ஆபிரகாம் 10 வருஷங்கள் பொறுமையாய் காத்திருந்தான். ஒருகட்டம் வந்தவுடன் ஆபிரகாம் பொறுமையை இழந்து ஆகாரின் மூலம் வாக்குத்தத்தம் பண்ணப்படாத இஸ்மாவேலை பெற்றெடுத்தான். இதினிமித்தம் ஆபிரகாம் மீண்டும் 14 வருஷம் பொறுமையாய் காத்திருந்தான். இந்த 14 வருஷங்களில் ஆண்டவர் ஆபிரகாமிடம் ஒன்றும் பேசவில்லை. வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர் ஆபிரகாமை மீண்டும் சந்தித்து ஈசாக்கை கொடுப்பேன் என்று கூறினார். மொத்தத்தில் ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணனப்பட்ட ஈசாக்கை பெற்றெடுக்க 25 வருஷங்கள் காத்திருந்தான். பொறுமையாய் காத்திருந்து தன்னுடைய வாழ்க்கையில் சந்ததியை பெற்று, அவன் வாழ்க்கையில் புன்னகை பெற்றுக்கொண்டான்.

யோசேப்பிற்கு ஆண்டவர் ஒரு தரிசனத்தை கொடுத்தார். அவனுடைய அரிக்கட்டு மாத்திரம் நிமிர்ந்து நின்றது, அவனுடைய சகோதரர்களின் அரிக்கட்டு, யோசேப்பின் அரிக்கட்டிற்கு முன்பாக தாளப்பணிந்துகொண்டது. இந்த தரிசனம் நிறைவேற யோசேப்பு 13 வருஷங்கள் பொறுமையாய் காத்திருந்தான். அவனுக்கு இருந்த பொறுமை, காத்திருப்பு அவன் தேசத்தின் அதிபதி என்ற ஸ்தானத்தை சுதந்தரித்தான். தாவீதுக்கு கிடைத்த இராஜாங்க அபிஷேகத்தை சுதந்தரிக்க அவன் 14 வருஷம் பொறுமையாய் காத்திருந்தான். பின்பு அவன் சமஸ்த இஸ்ரவேலுக்கு இராஜாவாக உயர்ந்தான். வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிக்க இஸ்ரவேல் ஜனங்கள் 430 வருஷங்கள் காத்திருந்தார்கள். பின்பு யோசுவாவின் காலத்தில் கானான் தேசம் ஆபிரகாமின் சந்ததிக்கு சொந்தமாயிற்று. இப்படி பொறுமையாய் காத்திருக்குகிறவர்கள், உயர்த்தப்படுவார்கள், சுதந்தரிப்பார்கள், ஆளுகை செய்வார்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அப் 7:17ல் ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் வாக்குத்தத்தம் நிறைவேற கர்த்தர் நியமித்திருக்கிற நேரம் என்று ஒரு காலம் காணப்படுகிறது. அந்த காலம், சமீபமாய் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நகோமி ரூத்தை பார்த்து சொல்லுகிறாள், என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள் (ரூத் 3:18). ரூத் பொறுத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையை நகோமி ஒருபுறம் கூறுகிறாள். மறுபுறம், போவாஸ் இந்த காரியத்தை முடிக்குமட்டும், அவன் இளைப்பாறமாட்டான், அதாவது, அமைதலாய் இருக்கமாட்டான் என்று கூறுகிறாள். அதுபோலத்தான் மணவாட்டியாகிய நீங்கள் பொறுமையாய் காத்திருங்கள். மணவாளனாகிய பரலோக போவாஸ் உங்கள் காரியம் கைகூடி வருமட்டும், உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நீங்கள் சுதந்தரிக்குமட்டும், அவர் இளைப்பாறமாட்டார்; அமைதலாய் இருக்கமாட்டார்; கவனியாமல் விடமாட்டார்; மறக்கமாட்டார்; மிகவும் சுறுசுறுப்பாக உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஆசீர்வாதத்தை நிச்சயமாக கொடுக்குமட்டும் அவர் இளைப்பாறமாட்டார். ஆபிரகாம், யோசேப்பு, ரூத், தாவீது பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தை சுதந்தரித்ததுபோல, பொறுமையாய் கர்த்தருக்கு காத்திருங்கள். பொறுமையாய் இருப்பவர்கள் பாக்கியவான்கள். யோபின் பொறுமையை குறித்து நாம் அறிந்திருக்கிறோம், அதின் முடிவையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகையால், உங்களுக்கான வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் சமீபமாய் இருக்கிறது என்பதை விசுவாசியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org