நீங்கள் நன்றாயிருப்பீர்கள் (It may go well with you).

அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும் (உபா. 5:29).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/42LDBA5yO4E

மோசே மரிப்பதற்கு முன்பு அவனுடைய பிரியாவிடை செய்தி தான் உபாகம புஸ்தகமாகக் காணப்படுகிறது. அதில் தேவனுடைய பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய  இருதயத்தின் வாஞ்சை என்பதைத் திரும்பத் திரும்ப எழுதுகிறதை உபா. 4:40, 5:16,29,6:3,18,24ல் வாசிக்கமுடிகிறது. உங்கள் பெற்றோர், குடும்பத்தினர், உங்கள் நலம் விரும்பிகள் நீங்கள் நன்றாய் காணப்பட வேண்டும் என்று சில வேளைகளில் விரும்புவார்கள், சில நேரங்களில் உங்கள் அழிவைக் கூட எதிர்பார்த்துக் காணப்படுவார்கள். ஆனால் நாம் ஆராதிக்கிற தேவன் மாத்திரம் நீங்கள் என்றென்றைக்கும் நன்றாய் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறவர். அவர் நன்மை செய்கிறவர், தீமை செய்ய அறியாதவர். 

நாம் நன்றாயிருப்பதற்கு மூன்று காரியங்களைச்  செய்யும்படிக்குக் கர்த்தர் கூறுகிறார். முதலாவது, கர்த்தருக்குப் பயந்த ஜீவியம் செய்யுங்கள். கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து நீ இப்போது  எனக்குப் பயப்படுகிறவன் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார் என்று ஆதி. 22:12ல் வாசிக்கிறோம். அதிலிருந்து கர்த்தருக்குப்  பயப்படுதல் என்பது அவருக்கு கீழ்ப்படிந்து  ஜீவிப்பது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன்  நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு,  மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். அவன் அப்படியே கீழ்ப்படிந்து சென்றான். அவனுடைய  கீழ்ப்படிதலை, தனக்குப் பயப்படுகிற பயமாகக் கர்த்தர் பார்த்தார். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம். ஆகையால் நீங்கள்  நன்றாயிருப்பதற்குக் கர்த்தருக்கு எந்நாளும் பயந்து,  கீழ்ப்படிந்து ஜீவியுங்கள். 

இரண்டாவது,   கர்த்தருடைய  வசனங்களை எல்லாம் கைக்கொள்ளுவதற்கு  ஏற்ற இருதயம் உங்களுக்குக் காணப்படும் போது  நீங்கள் நன்றாயிருப்பீர்கள். கர்த்தருடைய எல்லா கற்பனைகளை, அதாவது ஆதி. 1:1லிருந்து வெளிப்படுத்தல் 22:21 வரைக்கும் நமக்காகவும், நம்முடைய பிள்ளைகளுக்காகவும்  எழுதிக் கொடுத்திருக்கிறார். அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல என்று 1 யோவான் 5:3 கூறுகிறது. என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் என்றும் வாக்கு கொடுத்திருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் நன்றாயிருப்பதற்குக் கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கிறவர்களாகவும், கேட்கிறவர்களாகவும் மட்டுமல்ல, அதைக் கைக்கொண்டு ஜீவியுங்கள்.

மூன்றாவது, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீங்களும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளும் நன்றாயிருப்பீர்கள் என்று உபா. 12:25 கூறுகிறது. ஆண்டவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. நம்முடைய உட்காருதலையும், எழுந்திருக்குதலையும், நமது எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அனேக வேளைகளில்  மனிதர்களைப்  பிரியப்படுத்த முயற்சித்து அவர்கள் விரும்புவதைச்  செய்கிறோம். ஆனால் கர்த்தருக்குப் பிரியமானது, அவருக்கு உகந்தது எது என்பதை சோதித்தறிய தவறிவிடுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே,  கர்த்தருக்குப் பிரியமானதை நீங்கள் செய்யும் போது, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நன்றாயிருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae