மத் 12:40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8iOL57hoeQ4
யோனாவிற்கும் , இயேசுவிற்கும் ஒரு சில ஒற்றுமைகள் காணப்படுகிறது. யோனா பாதாளத்தின் வயிற்றிலிருந்தான் என்று யோனா 2:2 கூறுகிறது. யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான் (யோனா 1:17). அதுபோல, இயேசுவும் தன்னுடைய மரணத்திற்கு பின்பு பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இரவும் பகலும் இருந்தார். இயேசு மரணத்தை சந்தித்த பிறகு, அவருடைய சரீரம் மாத்திரமே, கல்லறையில் இருந்தது. ஆனால், அவருடைய ஆவி, உடனடியாக பூமியின் பாதாளத்திற்கு கடந்து சென்றது. மூன்று நாள் கழிந்து, இயேசு மீண்டும் தன்னுடைய சரீரத்திற்கு வந்து, உயிரோடுகூட எழுந்தார். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர் (அப் 2:27) என்ற வசனத்தின்படி, இயேசு தன்னுடைய சரீரத்தோடு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்; அவர் பாதாளத்தில் விட்டுவிடப்படவில்லை. தேவன் மூன்றாம் நாளில் பூமியிலிருந்து சகலவித கனிகளை உண்டுபண்ணி, அவைகள் முளைத்தெழும்படி செய்தார். அதுபோல, கிறிஸ்துவும் மூன்றாம் நாள், பூமியிலிருந்து உயிரோடு எழும்பினார். இயேசுவின் உயிர்தெழுதலினால் இரட்சிப்பு நிறைவேறியது.
யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார் என்று லுக் 11:30 கூறுகிறது. யோனாவும் அடையாளமாக இருந்தார்; இயேசுவும் அடையாளமாக இருந்தார். ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் என்ற வசனத்தின்படி இயேசுவின் பிறப்பு ஒரு அடையாளம்; அதுபோல, அவருடைய இறப்பும் ஒரு அடையாளம். நம்மையும் ஆண்டவர் அற்புதங்களாகவும் அடையாளங்களாகவும் வைத்திருக்கிறார். நாம் ஆண்டவருடைய அடையாளங்கள், அதாவது நாம் அவருடைய சொந்த ஜனங்கள் என்பது தான் அடையாளம். அதுபோல, ஆண்டவர் நம்முடைய அடையாளம், அதாவது, ஆண்டவர் நம்முடைய சொந்த தகப்பன் என்பதும் அடையாளம். அடையாளத்தை தேடுகிற ஜனங்கள் இந்த உலகத்தில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். நான் இன்னாருடைய சொந்தக்காரன், இன்னாருடைய நண்பன் என்று சொல்லி கொண்டு, தங்களுடைய அடையாளத்தை வெளிக்காட்ட நினைக்கிறார்கள். நமக்கோ, இயேசுவே நம்முடைய அடையாளமாய் காணப்படுகிறார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org