கர்த்தர் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவார் (The Lord turns your captivity).

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது,  யாக்கோபுக்குக்  களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் (சங். 14:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NNiN-yNuwa8

இயேசு சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிறவர். அவருடைய ஊழியத்தின் நாட்களில் பலவிதமான சிறையிருப்புகளின் பிடியில் ஜனங்கள் காணப்பட்டார்கள். சத்துருவினாலும், நோய்களினாலும்,  பிறவி குறைபாடுகளினாலும், பாவத்தின் பிடியினாலும் சிறைபிடிக்கப்பட்டவர்களை அவர் விடுதலையாக்கினார். அவரிடத்தில் வந்த எல்லாருக்கும் அற்புதங்களைச் செய்து அவர்களை விடுவித்தார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவருடைய வல்லமையும், அற்புதங்களும் குறைந்து போகவில்லை. அவர் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற சிறையிருப்புகளை இந்த புதிய மாதத்தில் மாற்றி உங்களை மகிழப்பண்ணுவார்.

இஸ்ரவேல் ஜனங்கள் பலவிதமான சிறையிருப்புகளில் காணப்பட்டார்கள். எகிப்தில் நானூறு வருடங்கள் அடிமைத்தனம் என்னும் சிறையிருப்பில் காணப்பட்டார்கள். அதன்பின்பு  பாபிலோனியச் சிறையிருப்பில் எழுபது வருடங்கள் காணப்பட்டார்கள். தாவீது கூட அவனுடைய குமாரனாகிய  அப்சலோமால் துரத்தப்பட்டு சிலநாட்கள் வனாந்தரத்தில்  சிறையிருப்பின் காலத்தில் காணப்பட்டான். ஆனால் குறித்த வேளை வந்தவுடன் கர்த்தர் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து  விடுவித்தார். சீயோனின்  சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பின வேளையில், அது அவர்களுக்கு ஒரு சொப்பனம் காண்பது போலிருந்தது என்று சங்கீதம் 126:1ல் எழுதப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் கர்த்தர் அற்புதமாய் செயல்பட்டு அவர்களை விடுவித்தார். அவர் தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, அவர்களுடைய சிறையிருப்பைத் திருப்பினார் என்று நன்றியோடு பாடினார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் சிறையிருப்புகள் எதுவாய்  காணப்பட்டாலும் இயேசு உங்களை விடுவிப்பார். உங்களுக்கு என்று ஒரு குறித்த வேளையை வைத்திருக்கிறார். அவர் அதினதின் காரியங்களை  அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். உங்கள் உபத்திரவங்களும், பாடுகளும், வேதனைகளும் எப்படிப்பட்டதாய் காணப்பட்டாலும் அதிலிருந்து உங்களை முழுமையுமாய் விடுவிக்க இயேசு வல்லமையுள்ளவர்.  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்ப ஜீவியத்தில், ஊழியங்களின் பாதையில் காணப்படுகிற நுகத்தடிகளை அகற்றி கர்த்தர் உங்களுக்கு விடுதலையைக் கொடுப்பார், அவருடைய சீயோனாய் காணப்படுகிற உங்களுக்குக் கர்த்தர் தயை செய்யும் வேளை வந்துவிட்டது. நீங்கள் எந்நாளும் சத்துருவின் பிடியில் காணப்பட வேண்டிய அவசியமில்லை, பாவம் என்னும் பாரத்தைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. சிலுவையண்டை வந்துவிடுங்கள், ஆண்டவர் உங்களுக்கு விடுதலையைத் தருவார். பலவிதமான குறைபாடுகளும், வியாதிகளும் உங்களை ஒருவேளை வேதனைப்படுத்தலாம். இயேசு உங்களுடைய பரம வைத்தியராய் காணப்படுகிறார். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களை விடுதலையாக்குவார். அவருடைய சிறகின் கீழிருக்கிற ஆரோக்கியம் உங்களை மூடும். ஊழியங்களின் பாதையில் காணப்படுகிற தடைகளைக் கர்த்தர் நீக்கிப்போடுவார். உங்களுக்கு முன்பாக அனுகூலமான திறந்த வாசலைக் கட்டளையிடுவார். அவர் உங்கள் எல்லாருடைய சிறையிருப்பைத் திருப்பும் போது உங்களுக்குக் களிப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae