பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23:34
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/q1FF7tQEiJU
கல்வாரி சிலுவையில் நம்முடைய இரட்சகராகிய இயேசு தொங்கிக்கொண்டிருந்த வேளையில் ஏழு வாத்தைகளை அவர் கூறினார். யோவான் சுவிஷேசத்திலும் நானே என்ற வார்த்தையை ஏழு முறை கர்த்தர் பயன்படுத்தினார். வெளிப்படுத்தல் விஷேசத்திலும் ஏழு சபைகளுக்குச் செய்திகளை அனுப்பினார். அதுபோல அவருடைய ஏழு கோபக்கலச நியாயத்தீர்ப்பு, ஏழு எக்காள நியாயத்தீர்ப்பு, ஏழு முத்திரை நியாயத்தீர்ப்பைக் குறித்தும் வெளிப்படுத்தலிலே வாசிக்கிறோம். ஏழு என்பது பூரணத்தைக் குறிக்கிறது. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என்று தேவனுக்குரிய பூரணம் நம்மில் காணப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்.
ஆண்டவர் சிலுவையில் கூறின மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதல் வார்த்தையிலிருந்து, அவர் தன்னைச் சிலுவையில் அடித்தவர்களை, அவமானப்படுத்தினவர்களை, நிந்தித்தவர்களை மன்னித்து மரித்தார் என்பதை அறியமுடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே நாமும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மற்றவர்கள் நமக்குச் செய்த தவறுகளை மன்னித்து அனுதினமும் வாழவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஸ்தேவான் கல்லெறியுணட வேளையிலும், முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறி கல்லெறிந்தவர்களை மன்னித்து நித்திரையடைந்தான். மன்னியாத சுபாவம் கசப்பை வளரவிடும், கசப்பு வெறுப்பை உண்டாக்கும், இவை இரண்டும் சேர்ந்து பழிவாங்கத் தூண்டும், கடைசியில் அக்கினிக் கடலுக்கு நேராய் இழுத்துச்செல்லும். காயின் தன் சகோதரனாகிய ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கசப்பையும், வெறுப்பையும் வளரவிட்டதினால் அவன் சகோதரனை கடைசியில் கொலை செய்தான். ஆகையால் தான் ஆண்டவர் இயேசு, தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து என்று எச்சரித்தார்.
மனிதக் குலத்தின் மகத்தான தேவை பாவ மன்னிப்பாய் காணப்படுகிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் தான் நம்மைச் சிருஷ்டித்தவரோடு ஐக்கியமாய் காணப்பட முடியும். கிறிஸ்து சிலுவையில் சிந்தின ரத்தத்தால் நாம் கழுவப்படும் வரைக்கும் பாவத்தில் காணப்படுகிறோம் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். பாவங்களை மன்னிப்பதற்கு மனுஷ குமாரனுக்கு மாத்திரம் அதிகாரமுண்டு. ஆகையால் சிலுவையண்டை இன்றே வந்துவிடுங்கள். அதுபோல பாவ உலகத்தில் காணப்படுவதினால் அறிந்தும் அறியாமலும் பல பாவங்களையும் மீறுதல்களையும் செய்துவிடுகிறோம். மன்னிக்கிற கர்த்தரிடம் அறிக்கைச் செய்து விட்டுவிடுங்கள். அவருடைய இரத்தத்தினால் அனுதினமும் கழுவப்பட்டு விடுங்கள். ஆத்துமாவிற்காய் பாவநிவிர்த்தி செய்வது ரத்தம் என்று வேதம் சொல்லுகிறது. பாவம் செய்கிற ஆத்துமா சாகும், பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. கிருபையின் நாட்களில் அவர் நம்மை மன்னிப்பதற்கு தயை பெருத்திருக்கிறார். இந்த நாட்களை பயன்படுத்தி பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ள கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் அனுக்கிரகம் செய்யவாராக..
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org