இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 23:43).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UhpVWcjhqJ8
இயேசு உலகத்தின் ஜனங்களுடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாய் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளையில், அவர் கூறின இரண்டாவது வார்த்தையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கருதப்படுகிறது. இயேசு அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறத்தக்கதாய், இடதுபுறம் ஒரு கள்ளனும் வலது புறம் ஒரு கள்ளனும் சிலுவையில் தொங்க இயேசு மத்தியில் தொங்கினார். நம்முடைய அக்கிரமங்களை அவர் சுமந்ததினால் அவர் அக்கிரமக்காரராய் கருதப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் என்று ஏசாயா 53:5ல் வாசிக்கிறோம். பாவமும், அக்கிரமமும் வேறு அர்த்தங்களை உடையதாய் காணப்படுகிறது. சிலவேளைகளில் அறியாமல் கூட பாவம் செய்துவிடுகிறோம், ஆனால் அக்கிரமம் என்பது முன்கூட்டியே அறிந்து துணிந்து செய்கிற குற்றமாய் காணப்படுகிறது. இரண்டு கள்ளர்களும் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள். ஆண்டவர் அவர்கள் நடுவில் நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் தொங்கினார்.
சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், ஆண்டவரை நோக்கி நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். இன்றும் அனேகர் சிலுவையைத் தோல்வியின் சின்னமாய், அவமானத்தின் சின்னமாய் கருதி, இயேசுவை இகழ்வதுண்டு. ஆனால் குற்றவாளிகளில் மற்றவன் அவனை நோக்கி, நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்;குத்தக்க பலனை அடைகிறோம், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். முதலாவது அவன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்கிறான், தான் தண்டனைக்குரியவன் என்பதையும் ஏற்றுக்கொள்கிறான். தன் பிழைகளை உணருகிற மனுஷன் யார் என்று வேதம் கேட்கிறது. அனேக வேளைகளில் நாம் நம்முடைய தவறுகளை உணருவதில்லை. விசுவாசிகளும், ஊழியக்காரர்களும் கூட இதே நிலையில் தான் காணப்படுகிறார்கள். தவறுகளை உணராத வரைக்கும் மனம் திரும்புதலின் அவசியத்தையும் அறிவதில்லை. பாவங்களை மறைக்கிறவனுக்கு வாழ்வு இல்லை, அறிக்கைச் செய்து விட்டுவிடுகிறவனுக்கு இரக்கம் உண்டு என்று வேதம் கூறுகிறது. அதோடு அவன் இயேசுவை ஆண்டவராய் பார்க்கிறான், அவருக்கு ஒரு ராஜ்யம் உண்டென்றும் விசுவாசிக்கிறான். ஆகையால், அவன் இயேசுவை நோக்கி, ஆண்டவரே உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்று வேண்டுதல் செய்தான். நாமும் அனேக வேளைகளில் ஆண்டவரே என்று கர்த்தரை அழைப்பதுண்டு. ஆனால் உண்மையாய் அவருடைய ஆளுகைக்கு முழுவதுமாய் விட்டுக்கொடுக்கிறவர்களாய் காணப்படுகிறோமா? அவருக்கு ஒரு ராஜ்யமுண்டு, அந்த ராஜ்யத்தில் நம்மைச் சேர்த்துக்கொள்ள துரிதமாய் வரப்போகிறார் என்று விசுவாசித்து அதற்காய் ஆயத்தப்படுகிறோமா? சிலுவைக் கள்ளனுடைய வெளிச்சம் கூட இன்றைய அனேக கிறிஸ்தவர்களுக்கு இல்லையென்பது தான் உண்மையாய் காணப்படுகிறது.
கர்த்தர் அவனுடைய வேண்டுதலின் சத்தத்திற்கு உடனடியாக செவிகொடுத்தார். தானும் சிலுவையில் வேதனையைச் சகித்துக்கொண்டிருந்த நிலையிலும், ஒரு பாவியின் ஆத்தும இரட்சிப்பு அவருக்கு முக்கியமாகக் காணப்பட்டது. அவனுடைய அங்கலாய்ப்பின் சத்தம் அவர் செவிகளில் விழுந்தது. அதே காரணத்திற்காய் தான் தேவாதி தேவன் இந்தப் பூமியில் வந்தார். இழந்து போன ஆத்துமாக்களைத் தேடவும், அவர்களை இரட்சிக்கவும் வந்தவர், அவனை நோக்கி இன்றைக்கு என்னுடனே நீ இளைப்பாறுதலில் இருப்பாய் என்று கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இயேசு என்ற நாமத்தைத் தவிர ஆத்தும மீட்பிற்கு, இரட்சிப்படைவதற்கு வேறே வழியே இல்லை. இயேசுவின் மூலமாய் அன்றி ஒருவனும் இளைப்பாறுதலில், அதாவது பரலோகத்தில் பிரவேசிக்கவும் முடியாது. ஆகையால் இயேசுவை இரட்சகராய் இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள். அதோடு, அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த பாரம் நம்மில் காணட்டும். அவர்களுடைய ஆத்தும இரட்சிப்பிற்காய் ஜெபிக்கிறவர்களாய், உழைக்கிறவர்களாய் காணப்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org