அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, தாகமாயிருக்கிறேன் என்றார்(யோவான் 19:28).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zk9veD7LzyM
இயேசு சிலுவையில் கூறின ஐந்தாவது வார்த்தையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்து வேளையில், தேவ குமாரனாய் அல்ல, மனுஷ குமாரனாக காணப்பட்டதினால், அவருடைய சரீரம் தண்ணீருக்காக ஏங்கினது. அவருடைய ஆவியில் ஆவிக்குரிய யுத்தத்தை ஜெயிப்பதற்கு போராடினார். அதே வேளையில், சரீரத்தில் அதிக வேதனையின் நிமித்தமும், அதிக ரத்தம் சிந்தினதினாலும், நாவறண்டு காணப்பட்டதினால் தாகமாய் இருக்கிறேன் என்று கூறினார். அவருடைய நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது என்று சிலுவையின் பாட்டாகிய சங்கீதம் 22:15ல் எழுதப்பட்டிருக்கிறது.
இயேசுவுக்கும் சமாரியா ஸ்திரீக்கும் நடந்த உரையாடலைத் தியானிக்கும் போது ஆண்டவருடைய உண்மையான தாகத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குப் போன போது அவர் சமாரியா நாட்டின் வழியாய் போகவேண்டியதாயிருந்து. யூதர்கள் சமாரியர்களை வெறுத்ததினால் அவ்வழியாய் அவர்கள் போவதில்லை. ஆனால் ஆண்டவர் அந்த கடினமான பாதையை தெரிந்தெடுத்து சுமார் எழுபது மைல் தூரம் நடந்து சென்றார். அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தவேளையில் யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே கிணறு இருந்தது, இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார், அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி வேளையாயிருந்தது. ஆறாம் மணி வேளை என்பது நம்முடைய நேரத்தின் படி நடுப்பகல் 12 மணியாய் காணப்படுகிறது. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளும்படிக்கு அங்கே வந்தாள், இயேசு அவளை நோக்கி தாகத்துக்குத்தா என்றவேளையில் அவள் நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம். அவளுக்கு அவர் பிரதியுத்திரமாகத் தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருந்தாயானால், நீ அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றும், இந்தத் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, அது அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்று கூறினார். அதோடு, அந்த ஸ்திரீயைப் பாவ உணர்வு அடையும் படிக்குச் செய்தார். ஆகையால் அவள் தன் ஊருக்குள் சென்று சாட்சி பகிர்ந்ததின் நிமித்தம் சமாரியரில் அநேகர் இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். ஆண்டவருடைய உண்மையான தாகம் ஆத்தும ரட்சிப்பாய் காணப்படுகிறது என்பதை இங்கே அறியமுடிகிறது. அதுவே அவருடைய போஜனம் என்றும் சீஷர்களிடம் கூறுவதை யோவான் 4:30-34 வரைக்கும் வாசிக்கும் போது அறிந்துகொள்ளலாம். வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று, உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்றும் ஆண்டவர் தன் சீஷர்களுக்கு ஆலோசனை கூறினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய தாகத்தைத் தீர்க்க இன்று நீங்கள் அவருக்கு வேண்டும். ஆண்டவர் இன்று நம்மை நம்பி, நம்மைச் சார்ந்திருக்கிறார். உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்ற அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்கு நாம் ஆயத்தப்படவேண்டும். உலகத்தில் காணப்படுகிற கடைசி ஆத்துமா இரட்சிக்கப்படும் வரைக்கும், இயேசு தாகமாகயிருக்கிறேன் என்று கூறுகிறவராகவே இருப்பார். நாமும் ஆத்துமா தாகத்தோடு சிலரையாலுகிம் நம் வாழ்நாட்களில் ஆண்டவர் அண்டை சேர்த்து அவர் தாகத்தைத் தீர்க்கிற பாத்திரங்களாய் காணப்படக் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org