முடிந்தது(Tetelestai- Paid in full).

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19:30).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aeh7VhmS0w0

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறின ஆறாவது வார்த்தை, அவருடைய வெற்றியின் முழக்கமாகக் காணப்படுகிறது. பிதாவாகிய தேவன் அவருக்குக் கொடுத்த அத்தனை வேலைகளையும் செய்து முடித்தவராய் ஜெயத்தோடு மரித்தார்.  மாரத்தான் ஓட்டத்தில் அனேகர் துவங்குவார்கள், சிலர் பாதியிலே விட்டுவிடுவார்கள், ஆனால் வெகுசிலர் ஒட்டத்தை ஜெயத்தோடு முடிப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே நம்முடைய துவக்கத்தை பார்க்கிலும் முடிவு சம்பூரணமாய் காணப்படவேண்டும். அனேகர் தங்கள் வாழ்க்கை முடியும் போது தாங்கள் செய்ய வேண்டியவைகளை செய்து முடிக்காமலேயே மரித்துவிடுவார்கள். கலக்கங்களும், திகில்களும் சூழ, வாழ்ந்திருந்த வேளையில் பல நற்கிரியைகளைச் செய்திருக்கலாமே என்ற துக்கத்தோடு மரிப்பார்கள்.  இன்னும் ஒரு கூட்டம், மரணம் தன்னை ஒருநாள் சந்திக்கும் என்ற உணர்வில்லாமலே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தேவ ஜனங்கள், கர்த்தருடைய வருகை தாமதிக்குமேயானால், கண்களை மூடும் போது கர்த்தர் நமக்கென்று நியமித்திருக்கிற அத்தனைக் காரியங்களையும் செய்து முடித்தவர்களாய் மரிக்கவேண்டும்.

Tetelestai- Paid in full என்ற இயேசுவின் வார்த்தையில் மிக ஆழமான அர்த்தம் உள்ளது. இயேசு மீட்பின் வேலையைச் செம்மையாகச் செய்து முடித்தார். நாம் வெள்ளியினாலும், பொன்னினாலும் அல்ல, ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட ஜனம். நீங்களும் நானும் அவருடைய இரத்தத்தினால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட ஜனம். இயேசு இரத்தம் சிந்திச் சம்பாதித்தது தான் அவருடைய மணவாட்டி சபை. பாவத்தின் பரிகாரத்திற்கு வற்றையெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனைக் காரியங்களையும் செய்து முடித்தார்.   ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும் என்ற வார்த்தையின் படி, கல்வாரி சிலுவையில் சத்துருவாகிய பிசாசின் சகல வல்லமைகளை உரிந்து, அவனை வெளியரங்கமாகிய கோலமாக்கி அவனுடைய வல்லமைக்கு முடிவை உண்டாக்கினார். சாபத்திற்கு ஒரு முடிவை உண்டாக்கினார். வியாதிகளுக்கும் வேதனைகளுக்கு முடிவை உண்டாக்கினார். பிதாவாகிய தேவனுடைய பூரண சித்தத்தை முழுவதுமாய் செய்து முடித்த வேளையில் முடிந்தது என்று சொல்லி தன் ஆவியை ஒப்படைத்தார்;. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் அத்தனை பேருக்கும் கர்த்தர் தாலந்துகளையும் கிருபைகளும் கொடுத்து, அவர் விட்டுச்சென்றப் பணியைத் தொடர்ந்து செய்து முடிக்கவும் கட்டளையிட்டிருக்கிறார் என்பதை மறந்து போகாதிருங்கள். நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்பது கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளையாய் காணப்படுகிழறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றினதினால், அவன் மரிக்கும் போது நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, என்று அறிக்கையிட்டு மரித்தான். யோவான் ஸ்நானகன் தன் பணிவிடை ஓட்டத்தை வெற்றியோடு நிறைவேற்றினான். உபத்திரவங்களும் பாடுகளும் அவர்களுடைய வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் காணப்பட்டது. ஆகிலும் கர்த்தர் அவர்களுக்கு நியமித்த காரியங்கள் அத்தனையும் செய்து முடிக்கிறவர்களாய் காணப்பட்டு சந்தோஷத்தோடு கண்களை மூடினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, நாமும் ஆண்டவருடைய மாதிரியைப் பின்பற்றுவோம். கர்த்தர் உங்களுக்கென்று நியமித்திருக்கிற அத்தனைக் காரியங்களையும் செய்து முடிக்க வேண்டிய கிருபைகளை உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org