கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா (1 கொரி. 15:14).
For audio podcast of this Manna Today, please click the link,
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவரையும் உயிர்தெழுந்த இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நிரப்பும் படிக்கு ஜெபிக்கிறேன்.
இயேசு ஊழியம் செய்து கொண்ட வந்த நாட்களில் சதுசேயர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறி ஆண்டவரோடு தர்க்கிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். இயேசு மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பரமேறிச் சென்றபின், பெந்தெகோஸ்தே நாளிற்குப் பின்பு அப்போஸ்தலர்களால் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. அந்நாட்களில் காணப்பட்ட சபையின் விசுவாசிகளிலும் சிலர் மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்தும், உயிர்த்தெழுதலினால் உண்டாகும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் பவுல் விளக்குகிறதை 1 கொரி. 15ம் அதிகாரத்தில் வாசிக்கமுடிகிறது.
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கம் விருதாவாய் காணப்படுகிறது என்று பவுல் எழுதுகிறார். உலகம் மரித்து மண்ணோடு போனவர்களைக் கொண்டாடுகிறது. வல்லமையோடு பூமியில் வலம் வந்த மகான்களுடைய கல்லறைகள் எல்லாம் பலதேசங்களில் இன்றைக்கும் அடைபட்டுக் காணப்படுகிறது. இயேசுவின் கல்லறை மாத்திரம் திறந்து காணப்படுகிறது, அவர் இங்கே இல்லை உயிர்தெழுந்தார் என்ற செய்தியை உலகிற்குப் பறைசாற்றுகிறது. அந்த உயிர்த்தெழுதலின் வல்லமையோடு பிரசங்கிப்பதினால்தான் கல்லான இருதயங்கள் உடைகிறது, அற்புதங்கள் நடக்கிறது, வெறுமைகள் மாறுகிறது, பின் மாற்றங்கள் விலகுகிறது, எழுப்புதல் உண்டாகிறது. அதுபோல் உங்கள் விசுவாசமும் விருதா என்று பவுல் கூறுகிறார். மரித்தவர்கள்மேல் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு, செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி என்று பிர.9:4 கூறுகிறது. இயேசு உயிரோடிருப்பதினால் தான் அவர்மேல் விசுவாசத்தை வைத்து நாம் வேண்டிக் கொள்ளுகிற எல்லாக்காரியங்களையும் நாம் பெற்றுக் கொள்ளுகிறோம். நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்றும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றும் கர்த்தர் வாக்கு அருளியிருக்கிறார்.
இயேசு எழுந்திராவிட்டால், நாம் இன்னும் நம்முடைய பாவங்களில் இருப்போம் என்று 1 கொரி. 15:17 கூறுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமை பாவங்களை மேற்கொண்டு ஜெய ஜீவியம் செய்யும்படிக்கு நமக்கு உதவிச்செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு முதற்பலனாய் உயிர்த்தெழுந்ததினால் அதே வரிசையில் அவருடைய வருகையில் நாமும் உயிர்த்தெழுவோம். கர்த்தருடைய பிள்ளைகள் மேல் மரணத்திற்கு அதிகாரம் இல்லை. கல்லறைகள் நம்மை அடைத்து வைக்கமுடியாது. அவருடைய வருகையின் எக்காள சத்தம் தொனிக்கும் போது, நாமும் மகிமையாய் உயிர்த்தெழுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae