உயிர்த்தெழுந்த இயேசு வேதத்தை விளக்கினார் (The resurrected Jesus explained the Scriptures.)

லுக் 24:32 அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள்..

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/szeWIgEdDCI

இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை இயேசு தரிசனமானார். மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி, இயேசு மூன்றாவதாக, இரண்டு சீஷர்கள் எருசலேமிலிருந்து எம்மாவுக்கு நேராக நடந்து செல்லுகையில், தன்னை உயிர்தெழுந்தவராக காண்பித்தார்.

எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமம் ஏழு அல்லது எட்டு மயில் தூரம் இருக்கும், அதாவது 11 லிருந்து 13 km இருக்கும். மெதுவாக நடந்து சென்றால், மூன்று மணி நேரத்தில் எம்மாவு என்ற கிராமத்தை அடைந்துவிடலாம். அவர்கள் நடந்துபோகையில், உயிர்த்தெழுந்த இயேசு அவர்களோடு கூட நடந்து சென்றார். அவர்கள் போகையில் ஆதியாகமம் துவங்கி மல்கியா வரைக்குமுள்ள வேத வசனங்களை இயேசு விளக்கி காண்பித்தார். எல்லா புஸ்தகங்களிலும் இயேசுவை குறித்து எழுதியிருப்பவைகளை இயேசு விளக்கி காண்பித்தார். மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் என்று லுக் 24:27 கூறுகிறது. கர்த்தருடைய வேதம் குறைவற்றது, அது ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறது. தீர்க்கதரிசனத்தை நாடி தீர்க்கதரிசிகளிடம் ஓடாதிருங்கள். அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனம் வேதாகமத்தில் காணப்படுகிறது. இந்த வசனங்களை இரவும் பகலும் தியானிக்கிற மனுஷன் பாக்கியவான். ஆகையால், வேத வசனத்தை அதிகமாய் விரும்பி வாசியுங்கள்.

வேதாகமத்தை வாசிக்கும்போது, அநேகர் எனக்கு என்ன வாக்குத்தத்தம் வரும் என்ற எதிர்பார்ப்போடு மாத்திரம் படிக்கிறார்கள். சிலர் வேதாகமத்தை தங்களது மூளையிலுள்ள அறிவிற்க்காக மாத்திரம் படிக்கிறார்கள். அப்படி படிக்கிறவர்களது வாழ்க்கையில் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. வேதாகமத்தை வாசிக்கும்போது முதலாவது இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வாசிக்கிறவர்களாகவும் தியானிக்கிறவர்களாகவும் நாம் காணப்பட வேண்டும். வேதாகமத்தில் பக்கத்துக்கு பக்கம், அதிகாரத்திற்கு அதிகாரம் இயேசு மறைந்தும் வெளிப்படையாகவும் காணப்படுகிறார். அந்த இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.

தேவ ஜனங்களே, இயேசுவை பற்றி அறிவது வேறு (Knowing about Jesus); இயேசுவை அறிவது வேறு (Knowing Jesus). இயேசுவை பற்றி உலகத்திலுள்ள புறஜாதியார், துன்மார்க்கர்கள், சொல்லப்போனால் சாத்தானும் அறிந்து வைத்திருக்கிறான். ஆனால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும். இயேசுவை அறிவதற்கான ஒரே வழி, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை தியானிப்பதே, என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இயேசு எம்மாவுக்கு கடந்து சென்ற இரண்டு சீஷர்களிடம் வசனத்தை விவரித்து காண்பித்தபோது, அவர்களுடைய இருதயம் கொழுந்துவிட்டு எரிந்தது. வசனத்தை தியானிக்கும்போது நம்முடைய இருதயம் கொழுந்துவிட்டு எரியுமென்றால், நீங்கள் இயேசுவை, வசனத்தில் அறிந்துகொண்டீர்கள் என்று அர்த்தம். அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று (எரே 20 :9) என்ற வசனத்தின்படி கர்த்தருடைய வார்த்தை உங்கள் இருதயத்தில் அக்கினியாய் இருக்கட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org