லுக் 24:34 கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டார்கள்…
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ZrWS6R-2Ufc
இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை இயேசு தரிசனமானார். இயேசு சீமோன் என்றழைக்கப்பட்ட பேதுருவுக்கு நான்காவதாக, தன்னை உயிர்த்தெழுந்த இயேசுவாக வெளிப்படுத்தினார். இதை அப்போஸ்தலனாகிய பவுலும் 1 கொரி 15:3-5ல் கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பேதுரு தன்னை ஒரு சீஷன் என்றழைக்கும் தகுதியை இழந்துபோன ஒரு சூழ்நிலையில் இருந்தான். ஆகையால் வெகு சீக்கிரத்தில் தான் விட்டுவந்த மீன் பிடிக்கும் வேலைக்கு சென்றுவிட்டான். அவன் செய்த பாவம் அவனை வாட்டிவதைத்ததால், பேதுரு தான் இனி நீதிமானாக மாறமுடியாது, தான் இனி கிறிஸ்துவுக்கு சீஷனாக இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை நீங்கள் காணப்படலாம். நான் ஆண்டவருடைய பிள்ளை என்று அழைக்க தகுதியற்றவனாக இருக்கிறேன். மிகப்பெரிய பாவத்தை செய்து, இயேசுவை மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைந்துவிட்டேன். இனி நான் இயேசுவின் பிள்ளையாகவும், அவருடைய சீஷனாகவும் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். நம்முடைய கிரியைகளின் அளவை பொறுத்து ஆண்டவருடைய அன்பை நாம் கணக்கிட முடியாது. நாம் தகுதியற்றவர்களாய் இருக்கும்போது அவர் நம்மீது கொண்ட அன்பு பெரியது. நம்முடைய ஆண்டவருடைய அன்பு நிபந்தனையற்றது. இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு, இளைய குமாரன் திரும்ப தகப்பனிடம் வந்தபோது, தகப்பனின் நிபந்தனையற்ற அன்பை நாம் பார்க்கலாம். ஆகையால், நீங்கள் ஒருவேளை சொல்லலாம், நான் பாவம் செய்துவிட்டேன் என்றும், அந்த சூழ்நிலையிலிருந்து விடுபடமுடியவில்லை என்றும் சொல்வீர்களென்றால், ஆண்டவரோடு ஒப்புரவாகிவிடுங்கள். அப்பொழுது ஆண்டவர் தன்னுடைய மாறாத அன்பை உங்களுக்கு வெளிக்காட்டி, அவருடைய வார்த்தையின் மூலம் அவர் உங்களுக்கு வெளிப்படுவார்.
இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். (யோவா 21:15). இயேசு மூன்று தரம் பேதுருவை பார்த்து நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்டார். ஆனால் பேதுரு நான் உம்மை நேசிக்கிறேன் என்று கூறுவான். இயேசு சீமோன் பேதுருவின் மீது வைத்த அன்பு, அகப்பே என்னும் அன்பு; அது நிபந்தனையற்ற அன்பு. மரித்து உயிரோடு எழுந்த இயேசு உங்கள் மீதும், அதே நிபந்தனையற்ற அன்பையே வைத்திருக்கிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org