உயிர்த்தெழுந்த இயேசுவின் சமாதானம் (The peace of the risen Jesus)

யோவா 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/87RMsCCwUyE

இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; ஐந்தாவதாக, இயேசு உயிரோடெழுந்தபிறகு , பத்து சீஷர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார்.

இயேசு அவர்களை சந்தித்து சொன்ன வார்த்தை, உங்களுக்கு சமாதானம் என்று கூறினார். இவ்வுலகில் வாழும் ஜனங்களுக்கு முதன்மையாக தேவைப்படுவது சமாதானமாய் காணப்படுகிறது. ஆத்தும ஆதாயம் செய்ய, அனுப்பப்படுகிறவர்களுக்கு, ஆண்டவர் சமாதானத்தை கொடுக்கிறார். சமாதானத்தை கூறுகிற சுவிசேஷகனின் கால்கள் அழகானவைகள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். கூடுமானால் யாவரோடும் சமாதானமாய் இருங்கள் என்று கர்த்தர் கூறுகிறார்.

ஆகையால், சாமாதானத்தை விட்டுச்சென்ற இயேசு கொடுக்கிற கட்டளை, உலகமெங்கும் போய், நான் கொடுத்த சமாதானத்தை மற்றவர்களும் அடைய, நீங்கள் புறப்பட்டுப்போங்கள் என்று கூறுகிறார். அமைதியை தேடி அலையும் திரள் கோடி ஜனங்கள் நம்முடைய தேசங்களில் உண்டு. நான் அமைதியை தேடுகிறேன் என்று இமையமலைக்கும், மற்ற மலைகளுக்கும் செல்லுகிற திரளான ஜனங்கள் உண்டு. அமைதியை தேடி, காட்டுப்பகுதிக்கு செல்லுகிற அநேக ஜனங்களும் உண்டு. சமாதானத்தை தேடி, ஆறுகள், நதிகள், கடல்கள், குளம் குட்டைகள் என்று தேடுகிற கோடிக்கணக்கான ஜனங்கள் உண்டு. உண்மையான தெய்வம் எங்கே என்று வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கும் இலட்சக்கணக்கான ஜனங்கள் உண்டு. இவர்களுக்கெல்லாம் இலவசமான
இரட்சிப்பையும், சமாதானத்தையும் கூறும் நபர்களாய் நாமெல்லாரும் காணப்படவேண்டும். இதுவே உயிர்த்தெழுந்த இயேசுவின் வாஞ்சையாய் காணப்படுகிறது.

நமக்கு அநேக திறமைகள் காணப்படலாம். பேச்சுத்திறன் காணப்படலாம், பாடும் திறன் காணப்படலாம் மற்ற பல திறமைகள் காணப்படலாம். இவைகளெல்லாம் இருந்தாலும் நாம் இரட்ச்சிப்பின் சந்தோசத்தை கொடுக்கும் சமாதானத்தை பரிசுத்த ஆவியின் துணையின்றி, எந்தவொரு ஆத்துமாவையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்த முடியாது. ஆகையால் தான், இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். (யோவா 20:21,22). சமாதானத்தை கூற, பரிசுத்த ஆவியானவர் மிகவும் அவசியம் என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு போதித்து, அவருடைய அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளும்படி செய்தார். ஆகையால், முதலாவது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்; பின்பு, உலகத்து ஜனங்களுக்கு சமாதானத்தை கூறுங்கள். அதன்பின்பு, ஜனங்கள் கிறிஸ்துவுக்குள் வந்து இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org