உயிர்த்தெழுந்த இயேசுவின் வழிகாட்டுதல் (Guidance from the Resurrected Jesus)

யோவா 21:6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/J5yjLycJ2cs

இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; ஏழாவதாக, இயேசு உயிரோடெழுந்தபிறகு , கலிலேயா கடலிலோரத்தில் அப்போஸ்தலருக்கு தன்னை காண்பித்தார்.

மீன் பிடிப்பதற்கு மிகவும் பொறுமை வேண்டும் என்று சிலர் சொல்லுவார்கள். விடுமுறை நாட்களில் சிலர் நேரத்தை கடத்த (Time Pass) மீன் பிடிக்க செல்லுவார்கள். அவர்கள் சொல்லுகிற ஒரு காரியம், மீன் பிடிப்பதற்கு மிகவும் பொறுமை வேண்டும், சில நாட்களில் தான் மீன்கள் அகப்படும் என்று சொல்லுவார்கள். ஆனால், மீன் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் தான் பேதுரு மற்றும் கூட இருந்த அப்போஸ்தலர்கள். அவர்களின் அனுபவம், திறமையினிமித்தம் இராப்பகலாக மீன் பிடித்தார்கள். கடைசியில் ஒரு மீனும் அகப்படவில்லை. அநேக வேளைகளில் நாம் நம்முடைய சுய முயற்சிகளினால் பல தோல்விகளை சந்தித்துவிடுகிறோம். நம்முடைய பலவிதமான முயற்சிகளை செய்தும், இராப்பகலாய் உழைத்தும், ஒன்றும் நடக்கவில்லை என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு உயிர்தெழுந்தவராக, அவர்கள் நடுவில் தோன்றி, நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். ஆண்டவருடைய வழிநடத்துதல் மிகவும் எளிதான வழிநடத்துதலாக இருந்தது. அநேக நேரங்களில் ஆண்டவர் நம்மை எளிதான வழியில் நடத்தும்போது, நம்முடைய திறமை அனுபவங்களை சார்ந்து, ஏன் இந்த எளிய வழியை கைக்கொள்ள வேண்டும் என்று சிந்திக்கிறோம். வசனம் கூறுகிறது, நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங் 32:8) என்று கர்த்தர் கூறுகிறார். சங் 143:10 கூறுகிறது, உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக என்பதாக.

நம்முடைய ஆண்டவருக்கு தெரியாத துறைகள் என்று ஒன்றுமில்லை. நீங்கள் ஆசிரியர்களாக, பொறியியல் வேலை செய்கிறவர்களாக, மருத்துவராக, தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறவர்களாக, பல தொழில் செய்கிறவர்களாக காணப்படலாம். எந்த வேலையாக இருந்தாலும், ஆண்டவருடைய வழிநடத்துதலை கர்த்தரிடம் கேளுங்கள். அவருடைய ஆலோசனைக்காக, உபவாசத்துடன் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் பல வருடமாக முயற்சித்து தோல்விகண்ட விஷயங்களில், ஆவியானவரின் எளிதான வழிநடத்துதல் இருக்கும்போது, உங்கள் ஆசீர்வாதம் பெருகும்; உங்கள் காரியம் கைகூடி வரும். ஆண்டவர் சொன்னபடி, வலப்பக்கமாக சீஷர்கள் வலையை போட்டார்கள். அப்பொழுது திரளான மீன்கள் அகப்பட்டது. நீங்களும் ஆண்டவருடைய வழிநடத்துதலின் படி உங்கள் வேலையை செய்யும்போது, நீங்கள் திரளான மீன்களை ஆசீர்வாதத்தை நன்மையை சுதந்தரிப்பீர்கள். மரித்து உயிரோடு எழுந்த இயேசுவின் வழிநடத்துதல் உங்கள் வேலை ஸ்தலங்களில் ஊழியப்பாதைகளில் நிச்சயம் உண்டாவதாக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org