மத் 28:18-20 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JsfDlvGiYaQ
இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; எட்டாவதாக, இயேசு உயிரோடெழுந்தபிறகு , கலிலேயா கடலில் பதினொருபேருக்கும், 500 விசுவாசிகளுக்கும் காட்சிகொடுத்தார். அதை பவுலும் குறிப்பிட்டிருக்கிறார். 1 கொரி 15:6 கூறுகிறது, அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள் என்பதாக.
இயேசு உயிரோடு எழுந்தபிறகு கொடுத்த இந்த பிரதான கட்டளையில் நான்கு படிகள் காணப்படுகிறது. முதலாவதாக, புறப்பட்டுப்போங்கள் என்று கூறுகிறார். நாம் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டும், நான் ஜெபித்துக்கொண்டு மாத்திரம் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டும், தொலைபேசியின் வாயிலாகவும் ஊடகத்தின் வாயிலாகவும் சுவிசேஷம் அறிவிக்கிறேன் என்று முடங்கிக்கொண்டு இருந்தால், இயேசு கொடுத்த பிரதான கட்டளையில் முதல் வகுப்பிலேயே தோலிவியடைந்துவிடுவோம். இன்றைக்கு அநேக வருட கிறிஸ்தவர்கள் கூட, முதல் வகுப்பை தாண்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக, சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்று கூறுகிறார். இன்று அநேக ஊழியர்கள் தங்களுக்கு ரசிக பட்டாளங்களை உண்டாக்கவும், தங்களுடைய பிரசங்கங்களுக்கு விசுவாசிகள் விசில் சத்தத்தை எழுப்பவுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். நம்முடைய நோக்கம் நம்முடைய குருவாகிய இயேசுவை போல சிந்தையையுடைய சீஷர்களை உருவாக்க வேண்டும் என்றே இருக்க வேண்டும்.
மூன்றாவதாக, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். ஞானஸ்நானம் என்பது ஜனங்களுடைய நம்முடைய விருப்பத்தை பொறுத்தது அல்ல; அது இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அத்தியாவசியமானது.
நான்காவதாக, மீதமுள்ள நாட்களில் கர்த்தருடைய உபதேசத்தில் நிலைத்திருக்கும்படி உபதேசிக்க வேண்டும். இந்த நான்கு படிகளிலும் நாம் செயல்பட வேண்டுமென்பதே ஆண்டவர் கொடுத்த பிரதான கட்டளை. இந்த கட்டளையை நாம் செயல்படுத்தும்போது, நம்முடைய நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் படைத்தவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோம் என்பதாய் காணப்பட வேண்டும். அப்படி கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதம், இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று ஆண்டவர் கூறுகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org