மாற் 16:14. அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/w0AH_1o_uvY
இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; ஒன்பதாவதாக, இயேசு உயிர்த்தெழுந்து பதினோரு சீஷர்களையும் கடிந்துகொண்டார்.
இயேசு கடிந்துகொள்ளுவாரா என்ற கேள்வியில் இருக்கும் ஜனங்கள் உண்டு. இயேசு அன்பாகவே தான் எப்பொழுதும் இருப்பார்; அவர் எப்பொழுதும் அணைத்துக்கொண்டும், நாம் என்ன செய்தாலும் அதை சிரித்த முகத்துடன் மன்னித்துவிடுவார் என்று மாத்திரம் அநேகர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய ஆண்டவர் ஒருபுறம் அன்பானவர்; மறுபுறம் பட்சிக்கிற அக்கினி. ஒருபுறம் அவர் தாயை போல மார்பை உடையவர்; மறுபுறம் மிலாற்றுகளினால் கண்டிக்கிற தகப்பன். ஒருபுறம் அவர் கிருபையானவர்; மறுபுறம் அவர் சத்தியமுள்ளவர்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். கல்லூரியில் குறைந்தது 60% வகுப்பில் வருகை பதிவு (Attendance Register) இல்லையென்றால், பேராசிரியர் கடிந்துகொள்ளுகிறார். பிள்ளைகள் தவறான வழியில் போனால், பெற்றோர்கள் கடிந்துகொள்ளுகிறார்கள். வேலை ஸ்தலங்களில் சரியாக வேலை செய்யாவிட்டால், எஜமான்கள் கடிந்துகொள்ளுகிறார்கள். இப்படி மனிதர்கள் அநேக விதங்களில் நம்மை கடிந்துகொள்ளுகிறார்கள். ஆனால், ஆண்டவர் கடிந்துகொண்டால், அதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
எதற்காக இயேசு சீஷர்களை கடிந்துகொண்டார் ? காரணம் அவர்களுக்குள்ளாக, அவிசுவாசம் என்னும் நோய், தொற்றுக்கிருமியை போல ஒட்டிக்கொண்டே இருந்தது. இயேசு வளர்ந்த ஊரிலுள்ள ஜனங்களுக்குள்ளாக இருந்த அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை (மத் 13:58). இந்த சம்பவத்தை சீஷர்கள் நன்றாக பார்த்து அறிந்திருந்தார்கள். விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே (மத் 17:17) என்று இயேசுவிடம் சீஷர்கள் அடிதான் வாங்கவில்லை; மற்றபடி நன்றாக திட்டு வாங்கினார்கள். சேவல் கூவுவதற்கு முன்பு பேதுரு மூன்று தரம் என்னை மறுதலிப்பான்; நானோ அவனுடைய விசுவாசம் ஒழிந்துபோகாமல் ஜெபம் செய்வேன் என்று இயேசு கூறிய விசுவாசம் இன்றியமையாதது என்பதையும் சீஷர்கள் அறிந்திருந்தார்கள். விசுவாசத்தை குறித்து இவ்வளவு அதிகமாக ஆண்டவர் கிளிப்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதை போல சொல்லிக்கொடுத்தும், ஆசிரியரை போல கண்டிப்போடு சொல்லி கொடுத்ததும், சீஷர்களுக்குள்ளாக அவிசுவாசம் ஒரு தொற்றுவியாதியை போல தொற்றிக்கொண்டிருந்தது. இதை கண்ட உயிர்த்தெருந்த இயேசு, அவர்களை கடிந்துகொண்டார். ஒருபோதும் நீங்கள் ஆண்டவருடைய வல்லமை, அவருடைய வார்த்தையின் மீது அவிசுவாசமாய் இராதேயுங்கள். அப்படி ஒருவேளை இருக்கும்போது, அவர் உங்களை கடிந்துகொண்டால் உங்கள் இருதயத்தை கடினமாக்காதேயுங்கள்.
ஆண்டவர் சொல்லுகிறார், என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள் (நீதி 1:23). நீதி 3:11 கூறுகிறது, என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே என்பதாக. வெளி 3:19ல் ஆண்டவர் கூறுகிறார், நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு என்பதாக. காரணம், அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார் (சங் 103:9). ஆகையால், அவிசுவாசத்திற்கு இடம் கொடாதேயுங்கள்; அவர் கடிந்துகொள்ளும்போது தாழ்மையாய் ஒப்புரவாகி இயேசுவை மீது விசுவாசம் வையுங்கள். அப்பொழுது விசுவாசிக்கிறவனால் எல்லாம் கூடும் என்ற வசனத்தின்படி, நீங்கள் செய்வதையெல்லாம் கர்த்தர் கைகூடி வரப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org