ஜெபத்துடன் தெரிந்தெடுங்கள் (Choose Prayerfully).

அந்நாட்களிலே, அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில்  பன்னிரண்டுபேரைத்  தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார் (லூக்கா 6:12,13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dOxUxZ0AZLk

இயேசுவின் ஊழியத்தை அவருடைய பரமேறுதலுக்கு பின்பு, அவரைப் பின்பற்றி, அவரைப் போலத் தொடர்ந்து   செய்வதற்கு சீஷர்கள் தேவைப் பட்டார்கள். அவருடன் அனேக சீஷர்கள் காணப்பட்டிருந்தும் அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுப்பதற்கு அவர் சித்தம் கொண்டார். ஆகையால் அதற்கு முன்பு இராமுழுவதும் ஜெபித்தார் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. மனுஷர்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும், அவர்களுடைய அனுபவத்தையும் இயேசு அறிந்திருந்தும், மிக முக்கியமான பணியை உலகம் முழுவதும் சென்று  செய்யப்போகிறவர்களைத்  தெரிந்தெடுக்க, இராமுழுவதும் ஜெபித்து, தெரிந்தெடுத்து, நமக்கு வழிகாட்டுகிறவராகக் காணப்பட்டார்.  கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தெரிந்தெடுக்கப் போகிற காரியங்களை அதிக ஜெபத்துடன் தெரிந்தெடுங்கள். அவைகள் படிப்பாகவும், வேலையாகவும், திருமண காரியமாகவும், தொழில்களாகவும் கூட காணப்படலாம்.  உங்கள் ஞானத்தையும், அனுபவத்தையும், மற்றவர்களுடைய வழிகாட்டுதலை மட்டும் பயன்படுத்தாமல் அதிக ஜெபத்தோடு ஒவ்வொரு காரியங்களையும் தேர்வு செய்யுங்கள்.  இயேசுவே ஒரு இராமுழுவதும் ஜெபித்து  சீஷர்களை தெரிந்தெடுத்தார் எனில் நாம் எவ்வளவு அதிகமாய் ஜெபித்து காரியங்களைச் செய்யவேண்டும்!

இராமுழுவதும் ஜெபித்து, பொழுது விடிந்த போது, அவர்   சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். சீஷன் என்பதற்குக்  கற்றுக்கொள்ளுகிற மாணவன் என்றும், குருவைப் பின்பற்றுகிறவன் என்றும் அர்த்தம். முதன்முதலாய் அந்தியோகியாவில் காணப்பட்ட  சீஷர்கள்  கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டதைப் போல, சீஷர்களைத் தான் அப்போஸ்தலர்களாகவும் கர்த்தர் தெரிந்து கொண்டார். இந்நாட்களில் குருவாகிய இயேசுவின் எந்த குணாதிசயங்களும் காணப்படுவதில்லை, ஆனால் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைக்கிறவர்கள் திரளாய் உண்டு. இயேசுவிலிருந்த சிந்தை, அவரிலிருந்த தாழ்மை, பரிசுத்தம் ஒன்றுமில்லாமல் இருந்தும் அடைமொழியாய் அப்போஸ்தலர் என்ற பெயரைப் போட்டுக் கொள்வதில் ஊழியர்களுக்குப் பெருமை.  அப்போஸ்தலர் என்ற வார்த்தைக்கு அனுப்பப்பட்டவன் என்பது பொருள், அனுப்பினவருடைய செய்தியைச் சொல்லுவதற்கு அனுப்பப்பட்டவன் என்பதாய் காணப்படுகிறது. இயேசுவும் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார் என்று எபி.3:1 கூறுகிறது. அவர் பிதாவின் செய்தியைச் சொல்லுகிறவராய் காணப்பட்டார். அதுபோல இயேசுவைப் போல வாழ்ந்து இயேசுவின் செய்தியைச் சொல்லுகிறவன்தான் அப்போஸ்தலனாய் காணப்படுகிறான். சுயவெறுப்பு இல்லாமல் ஆடம்பரமாய் வாழ்ந்துகொண்டு அப்போஸ்தலன் என்று தன்னை அழைக்கிறவன் இயேசுவின் அப்போஸ்தலன் அல்ல. எபேசு சபை, அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதைச்   சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்தது என்று வெளி. 2:2 கூறுகிறது. அவர்களைப் போல எல்லாவற்றையும் சோதித்தறிந்து, ஜெபத்தோடு தெரிந்தெடுத்து,  நலமானதைப்  பின்பற்றுங்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae