கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1 இரா.17:14).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OzHnpEgnB84
யேகோவாயீரே என்பது நம்முடைய தேவனுடைய நாமங்களில் ஒன்று, அவர் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கிறவர் என்பது அதின் அர்த்தம். எலியா தீர்க்கதரிசியின் நாட்களில் இஸ்ரவேல் தேசத்தில் மூன்று வருஷம் பஞ்சம் வந்தது. ஆகாபும் யேசபேலும் இணைந்து இஸ்ரவேல் தேசம் முழுவதிலும்; பாகாலின் பலிபீடங்களைக் கட்டி, ஜனங்கள் பாவம் செய்து வழிதவறி போகும் படிக்குச் செய்ததினால் அப்படிச் சம்பவித்தது. பஞ்சத்தின் நாட்களில் கர்த்தர் எலியாவை நோக்கி, கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு, அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி, அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் கர்த்தருடைய வார்த்தையின் படியே செய்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
சிலநாட்களுக்குப் பின்பு மழையில்லாததினால் ஆற்றின் தண்ணீர் வற்றிப் போயிற்று. ஆகையால் கர்த்தர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். எலியா அங்கே வந்த வேளையில், ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கி, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெய்யுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லை, இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்று கூறினாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து, ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா, கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் கூறினான். அவள் கர்த்தருடைய வார்த்தையின்படியே செய்தாள், பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு புதிய மாதத்தில் பிரவேசித்திருக்கிறோம். உங்கள் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதிருங்கள். யுத்தங்களும் யுத்த சத்தங்களும் எங்கும் தொனித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் இருதயங்கள் பயப்படவும், கலங்கவும் வேண்டாம். நீங்கள் கர்த்தருடைய வார்த்தையின் படி ஒவ்வொரு காரியங்களையும் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். அதுபோல, கர்த்தருடைய வார்த்தையின் மேல் உங்கள் விசுவாசத்தை முழுவதுமாய் வையுங்கள். அப்போது ஆண்டவர் உங்களோடு கூட இருந்து, உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திந்து, உங்களை அற்புதமாய் ஒவ்வொரு நாளும் நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae