தேவையானது ஒன்றே (One thing is Needful).

லுக் 10:41,42 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vH2anSVvne8

இயேசுவின் பாதத்தில் மரியாள் அமர்ந்ததிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று ஆவிக்குரிய உண்மைகள் காணப்படுகிறது.

முதலாவது, நடக்காமல், ஓடாமல் அல்லது நிற்காமல் மரியாள் இயேசுவின் பாதத்தின் அருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தையை கேட்டுக்கொண்டிருந்தாள். இது இளைப்பாறுதலை குறிக்கிறது. ஆண்டவர் நம்மிடம் பேசுவதைக் கேட்பதற்கு முன்பு, நம் இதயங்கள் இளைப்பாறுதலிலும், நம் மனது இங்கும் அங்குமாக அசைவாடாமலும் காணப்பட வேண்டும்.

இரண்டாவது, இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருப்பது மனத்தாழ்மையை குறிக்கிறது. மரியாள் இயேசுவைப் போலவே அதே மட்டத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கவில்லை, ஆனால் கீழ் மட்டத்தில் அமர்ந்திருந்தாள். ஆண்டவர் பெருமைமிக்க மனிதனிடம் ஒருபோதும் பேசுவதில்லை. ஆனால் அவர் எப்போதும் பேசவும், அவருக்கு முன்பாக ஒரு குழந்தையைப் போல இருக்கும் தாழ்மையான பிள்ளைகளுக்கு தனது கிருபையை வழங்கவும் தயாராக இருக்கிறார் (மத் 11:25).

மூன்றாவதாக, மரியாளைப் போல அமர்ந்திருப்பது கீழ்ப்படிதலை குறிக்கிறது. ஆண்டவருடைய வார்த்தை அவருடைய இருதய வாஞ்சையின் வெளிப்பாடாகும். நாம் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே அவர் பேசுகிறார். ஆண்டவருடைய சித்தத்தைச் செய்ய நாம் விருப்பமுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே, அந்தச் சித்தத்தைப் பற்றிய புரிதலைப் பெறுவோம் என்று இயேசு யோ 7:17ல் தெளிவுபடுத்தினார்.

ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பல குறிக்கோளில், முதல் குறிக்கோள், முன்னுரிமை, ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவர் வார்த்தையை கேட்பதாய் காணப்படட்டும்.

இந்த உலக வாழ்க்கையில் மனிதன் அநேக தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனின் தேவைகளும், மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. அந்த தேவைகள் நிறைவேற மனிதன் ஒரு குறிக்கோளோடு அதாவது முன்னுரிமையோடு, பல செயல்திட்டங்களை தீட்டி செயல்படுகிறான். உலகத்திலிருக்கும் பெரிய பெரிய பணக்காரர்களின் குறிக்கோள்கள் ஒருமாதிரியும், அரசியல்வாதிகளின் குறிக்கோள்கள் வேறொரு மாதிரியும், பாமர மக்களின் குறிக்கோள்கள்கள் மற்றொரு வகையிலும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இயேசு மனிதனின் குறிக்கோள்கள் பலவகையிலிருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குறிக்கோள் காணப்பட வேண்டும். அது இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய வார்த்தையை கேட்கவேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார்.

எப்படி அவருடைய வார்த்தையை கேட்கமுடியும்? பதில் உங்கள் கைகளில் தவழும் பரிசுத்த வேதாகமத்தின் மூலமாகவே நீங்கள் இயேசுவின் வார்த்தையை கேட்கமுடியும். நீங்கள் தனியாக ஆண்டவருடைய பிரசன்னத்தில், வேதாகமத்தை வாசிப்பதிலிருந்து வரும் வார்த்தைக்கு ஒப்பானது வேறெதுவும் இல்லை. வேதத்தை தினம் தோறும் வாசிக்காத கிறிஸ்தவன், உண்மையாகவே கிறிஸ்தவன் அல்ல. ஒவ்வொருநாளும் வேதாகமத்தை வாசிக்க செல்லும் முன், கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்ற சிந்தையோடு வேதத்தை படிக்க ஆரம்பியுங்கள். வேதத்தை திறப்பதற்கு முன்பாக அருகில் ஒரு நோட்டும், பேனாவும் வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் அன்று உங்கள் உள்ளத்தில் உணர்த்தும் வார்த்தைகளை எழுதிவைத்து தியானிக்க ஆரம்பியுங்கள். வார்த்தையின் மூலம் ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டும் என்ற சிந்தையில் வேதாகமத்தை வாசியுங்கள். சங்கீதம் புஸ்தகத்தை மாத்திரம் திரும்ப திரும்ப வாசித்து மற்ற புஸ்தகங்களை திறக்காமலே இருக்கும் கிறிஸ்தவர்களாக காணப்பட வேண்டாம். மிகவும் கிரமமாக வேதத்தை நேசித்து வாசியுங்கள். திறந்த மனது உங்களுக்குள்ளாக இருக்கட்டும். இதுவே ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முதல் படியாக வைத்திருக்கிறார். தேவையானது ஒன்றே ஒன்று; அது இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து, அவருடைய வார்த்தையை கற்றுக்கொள்வது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org