மாற் 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lluYcvwZJFk
நம்முடைய ஆண்டவர் குறைவுகளை சுட்டி காட்டுபவர். காரணம் நாம் நிறைவாய் ஆசீர்வதிக்கும்படியாகவும், பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்கும்படியாகவும் குறைவை சுட்டி காட்டுகிறார். அதுவும் அன்பு கூர்ந்து குறைவை சரிசெய்துகொள்ளும்படி செய்கிறார்.
இங்கே நாம் வாசிக்கிறோம், ஒரு செல்வந்தன் மிகுந்த ஆர்வத்துடன் ஆண்டவரிடம் வந்தான், ஆனால் ஏமாற்றத்துடன் சென்றான். அவன் கர்த்தரிடம் ஓடி வந்து, சத்தியத்தை அறியும் ஆர்வத்தைக் காட்டினான், அவன் மண்டியிட்டு, தன் மனத்தாழ்மையை வெளிப்படுத்தினான். இயேசு அவனிடம் கட்டளைகளைப் பற்றிப் பேசியபோது, அவற்றையெல்லாம் கடைப்பிடித்ததாக அவன் தயக்கமின்றி பதிலளித்தான். அவன் ஒருபோதும் விபச்சாரம் செய்யவில்லை, ஒருபோதும் கொல்லவில்லை, ஒருபோதும் திருடவில்லை, ஒருபோதும் பொய் சாட்சி சொல்லவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, தன் தந்தையையோ தாயையோ அவமதிக்கவில்லை. அவன் ஒரு இளைஞன், நேர்மையானவன், ஒழுக்கமானவன், என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் இயேசு அவனது வாழ்க்கையில் இன்னும் இல்லாத ஒரு விஷயத்தில் தனது விரலை வைத்தார், அது இல்லாமல் அவனுடைய மற்ற அனைத்து தகுதிகளும் பயனற்றவை என்பதை சுட்டி காட்டினார். இவற்றில் அவன் குறைவுபட்டவனாக காணப்பட்டான் என்றால், அவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றவில்லை. அவன் செல்வத்தின் மீதான பற்றுதலால், சிலுவையை எடுத்துக்கொண்டு கர்த்தரைப் பின்பற்ற அவர் விரும்பவில்லை.
இந்த ஒரு குறைவு நம்மில் அநேகருக்கு காணப்படுகிறது. ஆண்டவர் தமது கிருபையின் ஐசுவரியத்தின்படி நம்மை அதிகமாக ஆசீர்வதித்திருக்கலாம். நல்ல வேலையில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கலாம், நல்ல செல்வம், நல்ல வீடு, நல்ல ஆஸ்தி, நல்ல வாகனம் போன்றவைகள் காணப்படலாம். இவைகளெல்லாம் இருந்தாலும் கூட ஆண்டவர் நம்மை பார்த்து உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு என்று ஆண்டவர் சொல்லுகிறார் என்றால், நமக்கு எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், நாம் வைத்திருக்கும் புகழும் செல்வமும் இருந்து என்ன பயன்?. நாம் இயேசுவை போல ஒவ்வொருநாளும் சுயம் சாக ஒப்புக்கொடுத்து சிலுவையை சுமந்து இயேசுவை பின்பற்ற வேண்டும்.
இயேசு பூமியில் இருந்த காலங்களில், சிலுவை மரணத்திற்கு நேராக கடந்து சென்றார். அது ஒரு அவமானகரமான காரியமாக அந்நாட்களில் எல்லாரும் பார்ப்பார்கள். அவ்வளவாக இயேசு தன்னுடைய சுயத்தை சாக ஒப்புக்கொடுத்தார். இயேசுவை போல நாமும் சுயத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்து, சிலுவை சுமந்து இயேசுவை பின்பற்றுவோம். நம்முடைய சிலுவையை சுமந்து செல்லுவது, நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கட்டும். பெருமைக்கு இடம்கொடுக்காமல், தாழ்மையின் சிந்தையை அணிந்து இயேசுவை பின்பற்றுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org