நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா (Come, let us face one another in battle)

அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான் (2 இரா. 14:8).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/efvxA4GpNSg

யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் யூதாவின் மேல் ராஜாவானான். அவன் தன்னுடைய தகப்பனைப் போலக்  கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் ராஜ்யபாரம் அவன் கையில் ஸ்திரப்பட்ட போது உப்புப் பள்ளத்தாக்கில்  ஏதோமியர்களில் பதினாயிரம் பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே  கொண்டுபோய், அவர்களெல்லாம்  நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டான். இவ்வண்ணமாக ஏதோமியர் மேல்  வெற்றி வாகை சூடினான்.  இந்நிலையில் சமாதானத்தோடு ஆட்சி செய்துகொண்டு வந்த இஸ்ரவேலின்  ராஜாவை வம்புக்கு இழுக்கிறவனாகக் காணப்பட்டான். அவனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான். அதற்கு அவன் நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக்  கர்வங்கொள்ளப்பண்ணினது, நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு, நீயும் உன்னோடே கூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான். ஆனாலும் அமத்சியாவின் இருதயம் மேட்டிமைக் கொண்டு  அவனுக்கு செவிகொடாமல் காணப்பட்டான். ஆகையால்,  இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்து அவனும் அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது, யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். யூதா பெரிய தோல்வியைத் தழுவினது. யூதாவின் குடிகள் ஏதோமின்  தெய்வங்களை  நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும் படிக்குத் தேவனாலே இப்படி நடந்தது என்று 2 நாளா. 25:20 கூறுகிறது.

இந்நாட்களில் காணப்படுகிற அனேக தேசங்களின் தலைவர்களுக்குள்ளாய் இப்படிப்பட்ட சுபாவம்  காணப்படுகிறது. அவர்களிடம் காணப்படுகிற இராணுவ பலமும், ஆயுதபலமும் அவர்களை மேட்டிமை கொள்ளும் படிக்குச் செய்கிறது. ஏற்கனவே அவர்கள் பெற்ற சில வெற்றிகள் இன்னும் அவர்களை மமதையின் உச்சிக்குக் கொண்டு செல்லுகிறது. ஆகையால் சமாதானத்தோடு காணப்படுகிற நாடுகளுடன் யுத்தம் செய்யும்படிக்கு, தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுப்படிக்குச்  செல்லுகிறார்கள். கடைசியில் தோல்வியைத் தழுவி, அவமானப்படுகிறார்கள். தேவ ஜனங்கள் என்று அழைக்கப்படுகிறவர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட சுபாவங்கள் உண்டு. அவர்கள் கர்த்தரைச் சார்ந்து ஜீவிக்கும் போது, கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலிருந்து விடுவித்து, தப்புவிக்கிறவராய் காணப்படுவார். யாரை விழுங்கலாம் என்று வகைதேடி சுற்றித்திரிகிற பிசாசின் கரங்களிலிருந்தும் தப்புவித்து இரட்சிப்பார். அனேக நன்மைகளையும் தந்து ஆசீர்வதித்து உயர்த்தும்போது, காலப்போக்கில் இருதயக்கர்வம்  அவர்களுக்குள்ளாக வருகிறது. ஆண்டவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத்  தூரம் போகிறார்கள், மற்றவர்களை அற்பமாய் கருதத் துவங்குவார்கள். அதினிமித்தம்  ஆண்டவர் அவர்களைச் சத்துருக்களின் கையில் விற்றுப் போடுவார், தோல்வியின் மேல் தோல்விகளைச்  சந்திக்கிறவர்களாய் காணப்படுவார்கள்.  கர்த்தருடைய பிள்ளைகளே, எப்பொழுதும் தாழ்மையோடு காணப்படுங்கள். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை உங்களுக்குள்ளாய் இருக்கட்டும். அப்போது தாழ்மையுள்ளவர்களுக்கு  கிருபையளித்து  மேன்மேலும் உயர்த்துகிற ஆண்டவர், உங்களையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae