நிச்சயமான கிருபைகள், நித்திய உடன்படிக்கை (Sure mercies, everlasting covenant)

ஏசாயா 55 : 3 உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DsdrXj9BoIc

தேவன் தாவீதுக்கு நிச்சயமான கிருபைகளை கொடுப்பேன் என்று வாக்கு பண்ணினார். அதற்கு முக்கியமான காரணம் தாவீது வாழ்ந்த நாட்களில் வேறு யாருக்கும் இல்லாத பெரிய விருப்பம் தாவீதுக்குள் காணப்பட்டது. தாவீது கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நினைத்தார். இதைப் பார்த்த நம்முடைய தேவன் மிகவும் சந்தோஷப்பட்டார். எனவேதான் தாவீதுக்கு நிச்சயமான கிருபைகளை நித்திய உடன்படிக்கையாக கொடுத்தார்.

நாம் ஆராதிக்கும் தேவன் நம்முடைய கிரியைகளுக்குத்தக்க பலன்களை தருகின்றவர். நீங்கள் எதை செய்தாலும் அதற்கு பலன் கட்டாயமாக உண்டு என்பதை மறந்திட வேண்டாம். என் நாமத்தினிமித்தம் ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக்கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று மாற்கு 9:41ல் தேவன் சொல்லி இருக்கின்றார்.

ஆகையால் தேவனுக்கென்று நீங்கள் செய்வதை சோர்ந்துபோகாமல் தொடர்ந்துசெய்யுங்கள். இன்னும் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையும் செய்யுங்கள். மேலும், தேவ ராஜ்யத்திற்க்கென்று நாம் செய்வதையும், கொடுப்பதையும் முழு மனதோடு, உற்சாகமாய் செய்ய வேண்டும் என்றும், முதன்மையானதை கர்த்தருக்கென்று கொடுத்து அவரை கனம்பண்ண வேண்டும் என்றும் வேதம் நமக்கு சொல்லுகின்றது.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து, கானானுக்கு நேராக நடத்திக்கொண்டிருந்தபோது, கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக என்பதை யாத்திராகமம் 25: 1,2 ல் நாம் வாசிக்கிறோம்.

எனவே தேவனுக்கென்று செயல்படுவதில் நீங்கள் சோரந்துபோகாதிருங்கள், உற்சாக மனதுடன் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் கிரியைகள் ஒவ்வொன்றுக்கும் நிச்சயமாக பலன் உண்டு. நம்முடைய தேவன் யாருக்கும் கடனாளி அல்ல. இப்படி தேவனுக்கென்று நீங்கள் எல்லாவற்றையும் செய்யும்போது உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் நிச்சயமான கிருபைகளை நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகின்றார். இந்த நிச்சயமான கிருபைகளினால் நீங்களும், உங்கள் வீடும், உங்கள் சந்தததிகளும் என்றென்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும், யாராலும் அதை அசைக்க முடியாது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org