இயேசு குஷ்டரோகியை சுத்தமாக்கினார் (Jesus cleansed a leper)

மத் 8:2-3 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Q_sXLw5BqAg

இயேசு தம்முடைய வார்த்தைகளால் மட்டுமல்ல, தம்முடைய செயல்களாலும் ஜனங்களுடன் தொடர்பு கொண்ட விதம் ஆச்சரியமானது. ஆகையால் அவருடைய வாழ்க்கையையும் அவர் தம்முடைய ஊழியத்தை நடத்திய விதத்தையும் நாம் கவனித்து பார்க்க வேண்டும்.

குஷ்டரோகத்தின் ஒவ்வொரு அறிகுறியும் ஒரு மனிதனிடமிருந்து உடனடியாக மறைந்துவிடுவது ஒரு அற்புதமான விஷயம். தொழுநோயாளிகள் எப்படி இருக்கிறார்கள், விரல்கள் அரிக்கப்பட்டு, மூக்கு அரிக்கப்பட்டு, முகத்தில் சிதைவு ஏற்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை அனைத்தும் ஒரு கணத்தில் மறைந்துவிடுவது உண்மையில் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயம். நாகமானின் குஷ்டம் நீங்க அவன் ஏழு முறை யோர்தானில் மூழ்கவேண்டியிருந்தது. ஆனால் உடனே தொழுநோயிலிருந்து அற்புதம் நடந்தால், அது மிகப்பெரிய அற்புதம் என்றே கூறவேண்டும். இன்று அப்படிப்பட்ட அற்புதம் நடந்தால் பல ஊழியக்காரர்கள் என்ன செய்வார்கள்? ஜனங்கள் மிகவும் உற்சாகமாக சென்று அனைவருக்கும் விளம்பரம் செய்ய சொல்வார்கள், அவருக்காக ஜெபித்தது யார் என்பதை அவர் அனைவருக்கும் சொல்வதை உறுதிசெய்வார்கள். பல கிறிஸ்தவ பிரசங்கிகள் இப்படித்தான் தங்களுக்கு மரியாதை தேடுகிறார்கள். பிரசங்கிகள் தங்களுக்கு மகிமையை சேர்க்க, பல முயற்சியை செய்கிறார்கள்.

ஆனால் இயேசு முற்றிலும் வித்தியாசமானவர். இயேசு கற்பித்த அனைத்தும் அவருடைய வாழ்க்கையால்தான். என் மூலம் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றோ அல்லது தேவன் பயன்படுத்திய வழி நான்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றோ இயேசு கவலைப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்தவ வட்டாரங்களில், கிறிஸ்தவ பிரசங்கிகளில், கிறிஸ்தவ அமைப்புகளில், தேவாலயங்களில் மற்றும் எல்லா இடங்களிலும் சுய விளம்பரமே நிறைய காணப்படுகிறது.

உமக்கு சித்தமானால் என்று குஷ்டரோகி அவரிடம் சொன்னபோது, ​​இயேசு எனக்கு சித்தமில்லை என்று சொல்லவில்லை. இயேசு உடனடியாக, எனக்கு சித்தமுண்டு என்று கூறினார்(மத்தேயு 8:3). நம்முடைய ஜெபங்களில் ஆண்டவரிடம், ஆண்டவரே எனக்கு இந்த நன்மையை தரவேண்டும் என்று கூறவே வாஞ்சிக்கிறோம்; மாறாக, உமது சித்தம் என் வாழ்க்கையில் நிறைவேறட்டும் என்று ஜெபிக்க அநேக விசுவாசிகள் பயப்படுகிறார்கள். ஐயோ, ஆண்டவர் நான் எதிர்பார்க்கிறதை செய்யமாட்டாரோ என்ற அச்சத்தில், உமக்கு சித்தமானால் என்ற வார்த்தையோடு ஜெபிக்க நம்முடைய மனது மறுத்துவிடுகிறது. அது நமக்கு எவ்வாறு பொருந்தும்? நம் வாழ்க்கையில் நமக்கு ஒரு தேவை ஏற்படும் போதெல்லாம், நாம் கர்த்தரிடம் சென்று, ஆண்டவரே, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நீர் விருப்பமுள்ளவரா?, உமக்கு சித்தமா? என்று கேட்டுப்பாருங்கள். அப்பொழுது இயேசு சொல்லுவார், ஆம், எனக்கு சித்தம் என்று கூறுவார். நம்முடைய சித்தம் அல்ல; ஒவ்வொருநாளும் ஆண்டவருடைய சித்தமே நம்முடைய வாழ்வில் நிறைவேற வேண்டும். குஷ்டரோகியை சொஸ்தப்படுத்திய ஆண்டவர், உங்கள் வாழ்க்கையிலிருக்கும் குஷ்டங்களை சுத்தமாக அவர் சித்தமுள்ளவராக இருக்கிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org