காய்ச்சலிலிருந்து சுகம் (Healing from Fever)

மத் 8:14,15 இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார். அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vE-DEJyUPdk

இயேசு பேதுருவின் வீட்டிற்கு கடந்து சென்றார். அவர் பெரிய பெரிய கூட்டங்களில் மாத்திரமல்ல, சாதாரண வீடாக இருந்தாலும் அவர் கடந்து வருவார். பேதுருவின் வீடு கடலோரத்தில் இருக்கும் கப்பர்நகூம் என்ற சிறிய கிராமத்தில் இருந்தது என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சாதாரண வீட்டிற்கு கடந்து செல்ல இயேசு சித்தம்கொண்டார். ஆகையால் இயேசு உங்கள் வீட்டிற்கு வருவாரா என்ற சந்தேகம் ஒருநாளும் இருக்க வேண்டாம். அவரை நீங்கள் கூப்பிட்டால், நீங்கள் இருக்கிற வீட்டிற்கு அவர் உங்களை தேடி வருவார்.

இயேசு பேதுருவின் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார். மாற் 1:30 கூறுகிறது, உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள் என்பதாக. பேதுருவின் மாமி காய்ச்சலில் இருப்பதை இயேசுவுக்கு தாமதமாக அல்ல; உடனே இயேசுவுக்கு தெரிவித்தார்கள். நமக்கு வரும் சிறிய தலைவலியாக இருந்தாலும், பெரிய காய்ச்சலாக இருந்தாலும், உடனே நாம் இயேசுவுக்கு அறிவிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். அவர் வீட்டிற்கு வந்தவுடன் பேதுருவின் மாமி ஜீரமாய் இருப்பதை பார்த்தார். அதாவது அவளுக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததை கண்டார்.

அந்தக் காலத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று சூழலில், காய்ச்சல் பெரும்பாலும் ஒரு தீவிர நோயாகக் கருதப்பட்டது. இப்பொழுது இருக்கும் நவீன மருத்துவ அறிவு மற்றும் சிகிச்சை அந்நாட்களில் இல்லாமல் இருந்தது. ஆகையால் அந்நாட்களில் வந்த காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதாக இருந்தது. அவள் படுக்கையில் நோய்வாய்ப்பட்டிருக்கிறாள் என்ற விளக்கம் அவளுடைய நிலையின் தீவிரத்தைக் குறிக்கிறது, ஏனெனில் அவளால் வழக்கமான கடமைகளைச் செய்ய முடியவில்லை. இந்நாட்களில் டைபாய்டு கொரோனா போன்ற காய்ச்சல் வந்தாலே, பலருக்கு உயிர் பிரிந்துவிடுகிறது. அப்படியென்றால் படுத்த படுகையிலிருக்கும் அவளுடைய நிலைமை அந்நாட்களில் மிகவும் மோசமாக இருந்தது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

இந்த சூழ்நிலையில் இயேசு அவளுடைய கையை தொட்டார். இயேசு தம்முடைய இரக்கத்தையும், குணப்படுத்துவதற்கான விருப்பத்தையும் இங்கே வெளிப்படுத்துகிறார். தொடுதல் என்பது இயேசுவின் தனிப்பட்ட ஈடுபாட்டையும் அக்கறையையும் காட்டுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொட்டால், தனக்கு காய்ச்சல் வந்துவிடும் என்ற அச்சத்திலிருக்கும் சூழ்நிலையில், இயேசு காய்ச்சலிலிருக்கும் அவளை தொட்டார். ஆகையால் உங்களை தொடும் தொலைவில் தான் இயேசு இருக்கிறார்; அவர் உங்கள் நெருக்கமாக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இயேசு அவளை தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று. எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும் இயேசு இரக்கத்தோடு ஒரு நபரை தொடுவாரென்றால், அங்கே வியாதிக்கு இடமில்லை. ஒருவேளை இப்படிப்பட்ட வியாதியில் நீங்கள் இருப்பீர்களென்றால், இயேசு உங்களை தொட்டவுடன், அந்த வியாதிக்கு இன்றே கடைசிநாள் என்பதை விசுவாசியுங்கள்.

சுகத்தை பெற்றவுடன் அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள். இதுதான் மிகவும் முக்கியமான காரியம். அநேகர் சுகத்தை பெற்று கொண்ட பிறகு, இயேசுவை விட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால் பேதுருவின் மாமி, அவருக்கு பணிவிடை செய்தாள். எத்தனையோ நன்மைகளை, சுகத்தை பெற்றுக்கொண்ட பிறகு இன்னும் இயேசுவுக்கு நீங்கள் பணிவிடை செய்யவில்லையென்றால், உங்களை இன்று திருத்திக்கொள்ளுங்கள். இன்றே இயேசுவுக்கு உடனே பணிவிடை செய்ய ஆரம்பியுங்கள். அவர் பிரதானமாக சொன்ன கட்டளையாகிய சுவிசேஷத்தை ஜனங்களுக்கு கொண்டு செல்லுங்கள்; தேவனுடைய இராஜ்யத்தை கட்ட அயராது செயல்படுங்கள். இதுவே நீங்கள் அவருக்கு செய்யும் பணிவிடை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org