மத் 9:2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gSDl76OAFJM
அநேக நேரங்களில் நம்முடைய பாவங்களே, நமக்கு பெரிய பிரச்னை என்பதை உணர்ந்துகொள்ளாமல் இருந்துவிடுகிறோம். நம்முடைய பாவங்கள், நம்முடைய ஆசீர்வாதத்திற்கு, அற்புதத்திற்கு, சமாதானத்திற்கு தடையாக இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒரு திமிர்வாதக்காரனை அதாவது முடக்குவாதம் அல்லது பக்கவாதம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவனை இயேசுவிடத்தில் சிலர் கொண்டு வந்தார்கள். இயேசு கொண்டுவந்தவர்களின் விசுவாசத்தை பார்த்து, முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவனை நோக்கி, மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறினார். சுற்றி இருந்தவர்கள் நினைத்திருப்பார்கள், இயேசு முதலாவது அவனுடைய முடக்குவாதத்தை குணப்படுத்துவார் என்பதாக. ஆனால், யாரும் எதிர்பாராமல், இயேசு முதலாவது அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று கூறினார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதன் மூலம் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால், உங்களுக்கு விசுவாசம் இல்லையென்றால், வேறொருவரின் விசுவாசம் உங்களுக்கு உதவும். முடக்குவாதக்காரனுக்கு விசுவாசம் இருந்தது என்று வசனம் கூறவில்லை. அவனை அழைத்து வந்த நபர்களின் விசுவாசம்தான் அங்கே இருந்தது. அந்த முடக்குவாதக்காரனை இயேசுவிடம் கொண்டு வந்ததே விசுவாசத்தின் செயல் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இயேசு அவனைக் குணப்படுத்துவதற்கு முன், இயேசு அவனுடைய பாவங்களை மன்னித்து, மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
பக்கவாதத்தை விட உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. அது உங்களுடைய பாவம். நீங்கள் ஒருவேளை உடல் ரீதியாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பெரிய பிரச்சனை உங்கள் பாவம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு முதலில் பக்கவாத நோயாளியை குணப்படுத்தவில்லை, மாறாக, அவர் அவனை முதலாவது மன்னித்தார்.
சுற்றியிருந்த சிலர், இந்த மனிதன் தேவதூஷணம் சொல்கிறான் என்று நினைத்தார்கள், ஏனென்றால் அவர்கள், ஒரு மனிதன் எப்படி பாவங்களை மன்னிக்க முடியும்? என்று நினைத்தார்கள். இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்திருந்தார் காரணம், அவருக்கு ஆவிகளை பகுத்தறியும் வரம் இருந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து, நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று கூறினார்.
ஆகையால் இயேசு நம் நோயைக் குணப்படுத்துவதை விட நம் பாவங்களை மன்னிப்பது மிகவும் விலை உயர்ந்தது. நம் நோயைக் குணப்படுத்த அவர் சிலுவையில் மரிக்கவில்லை. ஆண்டவர் பரலோகத்திலிருந்து ஒரு வார்த்தையைப் பேசி எல்லோருடைய நோயையும் குணப்படுத்த முடியும். பூமியில் பாவத்தை மன்னிக்க தமக்கு அதிகாரம் உள்ளது என்பதை நிரூபிக்க இயேசு இதைச் சொன்னார். பின்னர் அவர் முடக்குவாதக்காரனிடம், நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். முதலாவது பாவத்தை மன்னித்தார்; பின்பு அற்புதம் செய்தார். ஆகையால் நமக்கு பிரதானமாக வேண்டியது, முதலாவது பாவ மன்னிப்பு; பின்பு அற்புதம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org