இயேசு பெரிய அற்புதத்தை விளம்பரப்படுத்தவில்லை (Jesus did not advertise the great miracle)

மத் 9:24,25 விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Egzbd9bHm3s

இயேசுவின் மூன்றரை ஆண்டுகால ஊழியத்தில் இஸ்ரேலில் பலர் மரித்தார்கள். நமக்குத் தெரிந்தவரை, அவர் அவர்களில் மூன்று பேரை மட்டுமே மரித்தோரிலிருந்து எழுப்பினார். ஒருவர் லாசரு, மற்றொருவள் யவீருவின் மகள், மற்றவர் நாயீன் ஊரிலிருந்த ஒரு விதவையின் மகன். அந்த மூன்றரை ஆண்டுகால ஊழியத்தில் இயேசு கேள்விப்பட்டது மூன்று பேர் மட்டும் தான் மரித்தார்கள் என்பது அல்ல; இறந்தவர்கள் அங்கே பலர் இருந்திருப்பார்கள். இயேசு மரித்தோரிலிருந்து ஒருவரை எழுப்பியதைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அதைக்கேட்ட ஜனங்கள், தயவுசெய்து இங்கே வாருங்கள், இங்கே யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறியிருக்கலாம். ஆனால், இஸ்ரேலில் மரித்தோரிலிருந்து இறந்த அனைவரையும் எழுப்ப இயேசு மூன்றரை ஆண்டுகள் செலவிடவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இயேசு எருசலேமில் உள்ள பெதஸ்தா குளத்திற்குச் சென்றதை கவனித்து பாருங்கள். யோ 5:3ல், அவர் அங்கு சென்றபோது, ​​திரளான மக்கள், அதாவது திரள் என்பது நிறைய பேர், ஒருவேளை 100 ,200 இல்லை 300 பேர் இருந்திருப்பார்கள். 38 வருடங்களாக அங்கே ஒரு மனிதன் அங்கே இருந்தான், இயேசு அவனிடம் சென்று, நீ குணமடைய விரும்புகிறாயா? என்று கேட்டார். எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். நூற்றுக்கணக்கான ஜனங்களின் மத்தியில் ஒருவன் அற்புதத்தை பெற்றுக்கொண்டான். ஆனால், இயேசு அவற்றை விளம்பரப்படுத்தவில்லை. இப்படியாக அநேக அற்புதங்களை செய்து, இதை ஒருவருக்கும் சொல்லாமல் கவனமாயிரு என்றெல்லாம் இயேசு சொன்னார்.

இப்படி இருக்கும்போது இயேசுவின் கண்களில் யவீருவின் மகளுக்கு தயை கிடைத்தது. அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். அவர் தன்னுடன், அறைக்குள் மூன்று பேரை மட்டுமே அழைத்துச் சென்றார். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். அங்கு பிரச்சனையை ஏற்படுத்தியவர்களை அவர் விரட்டி, நீங்கள் எதையும் நம்பவில்லை, இங்கே நிற்காதீர்கள் என்று கூறி அவர்களை வெளியே துரத்தினார். நாமும் அவிசுவாசமுள்ள வார்த்தைகளை பேசுகிற ஜனங்களை நம்மோடு நெருங்கிய வட்டத்தில் வைத்திருப்பது ஆபத்து என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இயேசு அற்புதம் செய்யும்போது அதை வெளி காட்ட விரும்பவில்லை. அவர் செய்யபோகிற அற்புதம் சாதாரண அற்புதமா ? சாதாரணமாக தலைவலியை, வயிற்றுவலியை, முதுகு வலியை குணப்படுத்தப்போகிறாரா? அவர் செய்யபோகிற அற்புதம் மரித்துப்போன ஒரு நபரை உயிரோடு எழச்செய்கிற பெரிய அற்புதத்தை செய்யப்போகிறார். நான் இறந்தவர்களை எழுப்பப் போகிறேன், இந்த மக்கள் அனைவரும் அதைப் பார்ப்பது நல்லது என்று அவர் நினைக்கவில்லை. மாறாக, இயேசு உள்ளே சென்றார், இயேசு அவள் கையை பிடித்தார், அவர் அவளை மரித்தோரிலிருந்து எழுப்பினார், பின்பு அவர் அப்படியே கடந்து சென்றுவிட்டார். அவர் அங்கேயே தங்கவும் இல்லை, விளம்பரப்படுத்தவும் இல்லை. ஆனால் அதன் பின்னர் இந்த செய்தி அந்த நாடு முழுவதும் பரவியது. இப்படிப்பட்ட சுபாவமுள்ள விசுவாசிகளாய், ஊழியக்காரர்களாய் நாம் இருக்க வேண்டும். ஜனங்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ளும்போது, நம்மை விளம்பரப்படுத்த அல்ல; இயேசுவை மகிமைப்படுத்தவே நாம் வாஞ்சிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org